Saturday, February 12, 2011

தோழர் பாட்டு


எட்டூரும் பாத்திருக்க
என் ஆத்தா உச்சி மோர
நான் வளர்ந்தேன் புழுதிக்காட்டில்
எங்கூட அவன் வளர்ந்தான்
சிற்றோடை போல
சிலுசிலுக்கும் தென்றல்போல
பற்றாடை வரிசைபோல
பஞ்சு வண்ண மேகம்போல
பட்டாலே மனதிலே
படபடக்கும் காலங்கள்
சுட்டாலும் எரிக்கேலா
சுவையான கனவுகள்
வற்றாமல் வரிசையாய்
வந்து குதிச்சு
நெஞ்சார சுழன்றடிச்சு
நினைவுகள் பறக்கிறதே

சிற்றாடை கட்டி
சிலிர்த்துக்கொண்டு பேசும்
உற்றாரும் ஊராரும்
உரிமை கொண்டாடா
பொற்றாமரை குளத்தடி
பொதிகை மர நிழலில்
பொழுது விழும் நேரம்
பொரி உறுண்டை வாங்கி வந்து
பொத்திப்பொத்தி நீ திண்ண
பொறுக்காமல் நான் பொங்க
பத்திரமாய் மறைத்து
பையிலே வாங்கி வந்து
பரிவுடனே நீ தர
பணிவுடன் நான் ஏற்க
பார்த்திருந்த பறவைகளும்
பரிவுடனே சிறகசைக்க
பாச நினைவுகள்-நெஞ்சில்
பலகோடி வருகிறதே

ஊரோரம் தோப்போரம்
ஊர்க்குருவி பாட்டோடு
ஊம்பாட்டும் சேந்துவர
உணர்வுகளை அது இழுக்க
எசப்பாட்டு நாம்பாட
ஏரிகளில் மீனோட
வெள்ளாடை கட்டி வந்து
வெயில் போல நிலவடிக்க
மல்லாக்கப்படுத்திருந்து
மார்குறுக்கை கைவச்சு
பாட்டி கதை கேட்டு
பலகனவில் நாம் மிதந்து
நீட்டி நிமிந்து
நிம்மதியாய் தூங்கிய
நேற்றென் காலங்கள்
நினைவில் வருகிறதே.......

மூட்டை முடிச்சோடு
முழுசாய்ப்புலம்பெயர்ந்து
வாழ்ந்த மண்விட்டு நாங்கள்
வரிசையாய் நகர்கையிலும்
ஒண்டாய்ப்போவோம்
ஒருவேளை செத்தாலும்
ஒருபாயில் சாவமெண்டு
புத்தி தெரியாத வயதில் நீ
புலம்பியதும்...
நீ வெம்ப நான் வெம்ப
எமைப்பார்த்து ஊர் வெம்ம
சேர்ந்து நகர்ந்த வண்டி
ஊர்விட்டு ஊர் போய்
சேர்ந்த கதைகள்
நினைவில் வருகிதே....

ஒட்டி ஒட்டி இடமில்லா
ரியூப்பில் காத்தடிச்சு
வக்கிள் எடுத்து
வலிச்ச றிம்பூட்டி
உக்கிக்கிடந்த சைக்கிலுக்கு
உசிர் கொடுத்து
ஒற்றைச்சைக்கிலில்
ஒன்றாக ஊர் சுத்தி
ஒருகால் நீ போட
ஒருகால் நான் போட
புழுதி வீதிகளில்
வலம்வந்த காலங்கள்
கண்ணில் விழுந்தென்னை
கலங்க வைக்கிறதே...

வஞ்சமில்லாது காலங்கள்
வருசங்களாய்ப்பறந்தோட
அஞ்சாத நெஞ்சனாய்
அணைக்கும் நேசனாய்
நெஞ்சிலே மண்பற்றை
சுமந்து நீ வளர
பிஞ்சிலே கோழை நான்
பின்னும் கோழை-என்
நெஞ்சிலே வீரத்தை
எப்படி எதிர்பார்ப்பாய்..
உண்மை தெரிஞ்ச
உத்தமன் நீ-ஒருபோதும்
என்னை உன்னுடன்
வாவென்று கேட்டதில்லை

கண்டந்தாண்டி கடல் தாண்டி
வாழ நான் ஓடிவர
கையசைத்து விடைதந்து
கடமை செய்ய நீ சென்றாய்
என் மனுசி எம்புள்ளை
என்குடும்பம் என்று நான்
சுத்தி சுத்தி சுழன்றடித்து
சுய நலத்தில் கூடுகட்டி
அண்ணாந்து பாக்கையில்
என் மக்கள் என் இனம்
என் தேசம் என்று நீ
எட்ட முடியா உயரத்தில்
ஏறி நின்று கையசைத்தாய்...

ஓடிவந்துன்னை
ஒருக்கால்பார்த்து
காலில் விழுந்துன்னை
கட்டி அணைத்து
உச்சிமோர்ந்து என்
உசிரை விட நினைக்கையில்-நாம்
பத்தி வயிறெரிய
பாசத்தில் துடிதுடிக்க
பாழுங்காலத்தால்
பலர்செய்த சதியால்
குளத்தோரம் பூத்தமரம்
குயில் பாடும் பொதிகை மரம்
குலங்காக்க எழுந்தமரம்
குனியாத வீரமரம்
வேருடன் சாஞ்சிடுச்சே-என்னுடன்
வேதனை தங்கிடுச்சே.....

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com