Tuesday, May 3, 2011

டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடன் உடலை கடலில் வீசிய அமெரிக்கா

இஸ்லாமாபாத்: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடனின் உடலை கடலில் வீசி விட்டது.


பின்லேடனின் உடலை நிலத்தில் புதைத்தால், அந்த இடம் தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறி விடும் என்ற காரணத்தால், உடலை தரையில் புதைக்காமல் கடலில் வீசியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்க அதிரடிப்படை நள்ளிரவில் நடத்திய துணிகர வேட்டை


இஸ்லாமாபாத் / வாஷிங்டன்:சர்வதேச பயங்கரவாதியும், அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஒசாமா பின்லாடன், அமெரிக்க அதிரடிப்படை நள்ளிரவில் நடத்திய துணிகர வேட்டையில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதன்மூலம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள அப்போதாபாத்தில், அவர் பல ஆண்டுகளாக பதுங்கியிருந்தது அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுர கட்டடங்கள், கடந்த 2001ம் ஆண்டு செப்., 11ம் தேதி, விமானங்கள் மூலம் மோதி தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதல் உட்பட உலக நாடுகள் பலவற்றில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தவர் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன். அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவரான இவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கப் படைகள் தேடி வந்தன. இவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 115 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில், அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்திய பின், அங்கிருந்து தப்பிய ஒசாமா, பாக்., - ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பழங்குடியின பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இதனால், அப்பகுதியில் முகாமிட்டு அமெரிக்கப் படைகள் தீவிரமாக தேடி வந்தன. இந்த தேடுதல் வேட்டையில் பலன் கிடைக்கவில்லை. இருந்தாலும், ஒசாமா எங்கிருக்கிறார் என்பதை கண்டறியும் பணியில் அமெரிக்கப் படையினரும், அந்நாட்டு உளவு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணையில், பயங்கரவாதி ஒசாமாவுக்கு செய்திகளைக் கொண்டு செல்லும் வேலையாட்கள் மூலமாக, அவர் மறைந்திருக்கும் இடம் கண்டறியப்பட்டது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கி.மீ., தொலைவில் உள்ள அப்போதாபாத்தில், பாகிஸ்தான் காகுல் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் இருந்து சில அடிகள் தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு தெரிவித்த, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள், ஒசாமாவை கொல்வதற்கு அனுமதி கேட்டனர். அவரும் தீவிரமாக விசாரித்த பின், அனுமதி வழங்கினார்.
சுட்டுக் கொலை: இதையடுத்து, ஒசாமாவை கொல்வதற்கான திட்டம் தயாரானது. அவர் தங்கியிருந்த வீட்டிற்கு நேற்று அதிகாலை 1.30 மணிக்கு, நான்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய, அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையினர் 25 பேர், தங்களின் அதிரடியை துவக்கினர். அப்போது, ஒசாமாவின் பாதுகாப்புக்கு நின்றிருந்தவர்களுக்கும், அமெரிக்கப் படைவீரர்களுக்கும் இடையே சண்டை நடந்தது. 40 நிமிடங்கள் நீடித்த சண்டையில், ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்தார். ஒசாமா கொல்லப்பட்டதன் மூலம், அமெரிக்க ராணுவத்தின் பத்து ஆண்டு கால தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது. ஒசாமாவுடன் அவருக்கு செய்திகளைக் கொண்டு செல்லும் அவரின் மகனும், மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட மற்றொரு பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வீட்டில் இருந்த மற்ற எந்த பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதிப்பு இல்லை.

ஒசாமா தங்கியிருந்த வீட்டை, அமெரிக்கப் படையினர் சுற்றி வளைத்த போது, தனது பாதுகாவலர்களுடன் சேர்ந்து ஒசாமாவும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். ஒசாமா கொல்லப்பட்ட பின், அவரின் உடலை அமெரிக்கப் படையினர் கைப்பற்றினர். இந்தச் சண்டையின் போது, அமெரிக்கப் படையினர் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று சேதம் அடைந்தது. அதை அமெரிக்கப் படையினர் வெடிமருந்துகள் மூலம் அழித்தனர். சண்டை நடந்து ஒசாமா கொல்லப்பட்டு நான்கு மணி நேரத்திற்குப் பின், அவர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டார்.

பயங்கரவாதி ஒசாமா கொல்லப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியை சுற்றிவளைத்த பாகிஸ்தான் ராணுவத்தினர், ஒவ்வொரு வீடாக தேடுதல் வேட்டை நடத்தினர். ஒசாமா பதுங்கியிருந்த வீடு, வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்திருந்தது. வீட்டை சுற்றிலும் ஏழு அடி உயரத்திற்கு சுற்றுச்சுவரும், அதன்மீது மின்சார ஒயரும் பொருத்தப்பட்டிருந்தது என, பாகிஸ்தான் செய்தி சேனல்கள் கூறியுள்ளன.

பாகிஸ்தான் காகுல் ராணுவ பயிற்சிக் கல்லூரி அருகேயுள்ள இந்த வீட்டில், ஒசாமா பதுங்கியிருப்பதாக, அமெரிக்கப் படையினருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகவல் கிடைத்துள்ளது. அது முதல் அந்த வீட்டை அமெரிக்க உளவு நிறுவனத்தினர் கண்காணித்து வந்துள்ளனர். ஒசாமா தங்கியிருந்த வீட்டில் தொலைபேசி இணைப்பு இல்லை. "டிவி'யும் கிடையாது. வீட்டில் உள்ளவர்கள் பயன்படுத்திய குப்பைகள் எல்லாம் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளன.

வீட்டின் ஜன்னல்கள் எல்லாம் பெரிய அளவில் இருந்தன. சில வழிகள் மூலமாகவே மட்டுமே அந்த வீட்டிற்குள் செல்ல முடியும். சிலர் மறைந்திருப்பதற்காக கட்டப்பட்டுள்ளது போலவே அந்த வீடு உள்ளது. பாகிஸ்தானின் கைபர் - பக்துங்வா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த வீட்டை முதலில் ஆக்கிரமித்து, அதன்பின் ஒசாமா பதுங்கியிருக்க ஒப்படைக்கப்பட்டுள்ளது.பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டதில் உரிய நீதியை அமெரிக்க மக்களுக்கு வழங்கியதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார். உலகம் முழுவதும் இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒசாமாவின் 6 பிள்ளைகள், 2 மனைவிகள், 4 நெருங்கிய நண்பர்கள் பாகிஸ்தானில் கைது

இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் 6 பிள்ளைகளும், 2 மனைவிகளும் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒசாமா பின் லேடன் இஸ்லாமாபாத்தில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள அபோத்தாபாத்தில் வைத்து அமெரி்ககப் படைகளால் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் லேடனின் இளைய மனைவியும், ஒரு மகனும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒசாமாவின் 6 பிள்ளைகள், 2 மனைவிகள் மற்றும் 4 நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே 60 கிமீ தொலைவில் உள்ள மலைப்பகுதியில் வைத்து அவர்களை பாகிஸ்தானியப் படைகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்லேடன் பலி எதிரொலி-அல்கொய்தா அணு குண்டு வீசுமா?

லண்டன்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டாலோ அல்லது உயிருடன் பிடிபட்டாலோ ஐரோப்பிய நாடுகள் மீது அணுகுண்டு வீசுவோம் என்று அல் கொய்தா ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில் சொன்னபடி அவர்கள் செய்வார்களா என்ற பீதி ஏற்பட்டுள்ளது.


இந்த எச்சரிக்கையை ஏற்கனவே அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் ஒரு விடுத்திருந்ததாக விக்கிலீக்ஸ் மூலம் வெளியான அமெரிக்க தூதரக கடிதப் பரிமாற்றத்தில் தெரிய வந்தது.

அதில் அந்த அல் கொய்தா தலைவர் கூறுகையில், பின்லேடனை அமெரிக்காவால் பிடிக்க முடியாது. ஒரு வேளை உயிருடன் பிடித்தாலோ அல்லது கொன்றாலோ, அணு குண்டு வீசி தாக்குதல் நடத்துவோம். இதற்காக ஒரு அணுகுண்டை ஐரோபப்ிய நாடு ஒன்றில் பதுக்கி வைத்துள்ளோம் என்று கூறியிருந்தார்.

தற்போது பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதால், அல் கொய்தா அடுத்து பயங்கர தாக்குதல்களில் ஈடுபடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளை குறி வைத்து அது தாக்குதலில் இறங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் ஏற்கனவே எச்சரித்தபடி அது அணுகுண்டு வீச்சில் இறங்குமா என்ற பீதியும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அணுகுண்டு என்பது ஏதோ பொறி உருண்டை போல சாதாரணமாக பாதுகாத்து வைத்திருக்க முடியாத ஒன்று என்பதால் அதற்கான வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் அல் கொய்தா ஆதரவு நாடு ஏதாவது அவர்களுக்கு இதுதொடர்பாக உதவினால் நிலைமை விபரீதமாகக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

ஒசாமாவை அமெரிக்க உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தது எப்படி?

வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தை அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு எப்படி கண்டுபிடித்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஒசாமாவை தாராபோரா மலைத் தொடரின் குகைகளில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் (un manned ariel vehicles) இரவு பகலாக தேடி வந்தன. இதற்கான 50க்கும் மேற்பட்ட உளவு விமானங்கள் இந்த மலைத் தொடரை சல்லடை போட்டு தேடின. ஆனாலும் ஒசாமா சிக்கவில்லை.

அதே போல சாட்டிலைட் தொலைபேசியில் ஒபாமா பேசுகிறாரா என்று அமெரிக்க ராணுவ செயற்கைக் கோள்கள் voice recognition software உதவியோடு உலகம் முழுவதும் இந்த ரக தொலைபேசிகளின் உரையாடல்களை கண்காணித்து வந்தன. ஆனால், ஒரு சத்தத்தையும் காணோம்.

இந் நிலையில் ஏராளமான உடல் உபாதைகளுடன் தவித்து வந்த ஒசாமா நிச்சயம் பாகிஸ்தானுக்குள் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அமெரிக்கா. இதனால் பாகிஸ்தானுக்குள் ஒசாமாவைத் தேடும் பணியை தீவிரமாக்கியது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவு தான் ஒசாமாவை பத்திரமாக பதுக்கி வைத்திருக்கிறது என்று தெரிய வந்தாலும், அதை பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் மறுத்தே வந்ததால், கெஞ்சிப் பார்த்து ஓய்ந்து போன அமெரிக்கா, பாகிஸ்தான் ஆட்சியாளர்களை மிரட்டவும் ஆரம்பித்தது.

லிபியாவுக்குள் குண்டுவீசி அந் நாட்டு அதிபர் கடாபிக்கே குறி வைக்க ஆரம்பித்துள்ள அமெரிக்கா, இதே நிலைமை உங்களுக்கும் விரைவில் ஏற்படும் என்றும் மிரட்டியதையடுத்து ஒசாமா குறித்த சில தகவல்களை அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தந்ததாகத் தெரிகிறது.

இந்த தகவல்களை முன் வைத்து சிஐஏ நடத்திய மாபெரும் உளவு-தேடுதல் வேட்டையில் தான் ஒசாமா கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கிடைத்த தகவல்களை வைத்து ஒசாமாவின் வளையத்துக்குள் உள்ள சிலரை அமெரிக்கா கண்காணிக்க ஆரம்பித்தது. இந்த வளையத்தில் சில சிஐஏ பிரிவினரையும் ஊடுருவ வைத்தது.

அவர்கள் மூலம் ஒசாமாவுக்கு கடிதங்கள் எடுத்துச் செல்லும் நபரை அடையாளம் கண்டது சிஐஏ. ஒசாமாவுக்கான அந்தக் கடிதங்கள் புனைப் பெயர்களில் செல்வதை அமெரிக்கா கண்டுபிடித்தது.

இந்த நபர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்போடாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பதை கடந்த ஜனவரியிலேயே சிஐஏ கண்டுபிடித்தது.

அந்த நபரிடம் விசாரணை நடத்தினால் கூட ஒசாமா அலர்ட் ஆகிவிடுவார் என்பதால், அவரிடம் எந்தவித பேச்சுவார்த்தையையும் வைத்துக் கொள்ளவில்லை அமெரிக்கா.

அந்த நபர் வசித்த வீடு 18 அடி உயரம் கொண்ட மிக உயர்ந்த சுற்றுச் சுவர்கள் கொண்ட 3 மாடிகள் கொண்ட வீடாகும். அந்த வீட்டைப் பார்த்தவுடனேயே அமெரிக்காவின் சந்தேகம் மேலும் வலுத்தது. அப் பகுதியில் உள்ள மற்ற வீடுகளை விட 8 மடங்கு மிக அதிகமான பரப்பளவில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது. மேலும் 2005ம் ஆண்டில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

பல கோடி மதி்ப்புடைய அந்த வீட்டின் தொலைபேசி எண்ணை அறிய அமெரிக்க உளவுப் பிரிவினர் முயன்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வளவு பெரிய வீட்டில் தொலைபேசியே இல்லை. மிகப் பெரிய பங்களாவில் ஒரு தொலைபேசி இணைப்பு கூட இல்லாதது ஏன் என்ற சந்தேகம் வரவே, அந்த வீட்டில் இண்டர்நெட் இணைப்பாவது இருக்கிறதா என்று விசாரித்தபோது அதுவும் இல்லை என்று தெரியவந்தது.

மேலும் அந்த வீட்டினர் குப்பைகளைக் கூட வெளியில் கொட்டாமல், தங்களது காம்பவுண்டுக்குள்ளேயே எரித்து வந்ததையும் அமெரிக்க உளவுப் பிரிவினர் பல மாதங்களாக கண்காணித்தனர்.

அந்த வீட்டில் கடிதங்கள் கொண்டு சென்ற நபரும் அவரது சகோதரரின் குடும்பங்கள் தவிர இன்னொரு குடும்பமும் இருப்பதும் தெரியவந்தது. அந்தக் குடும்பம் பின் லேடனின் குடும்பம் என்ற முடிவுக்கு வந்த சிஐஏ, இந்த வீட்டை சோதனையிடுவது குறித்து முடிவு செய்தது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையில் 5 உயர் மட்டக் கூட்டங்களும் நடந்தன.

அதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்குத் தெரிந்துவிடாமல் இந்த ஆபரேசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு தகவல் கிடைத்தால் ஒசாமாவை காப்பாற்றிவிடுவார்கள் என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டது.

இதனால் கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் கூட, இந்த ஆபரேசனை நாமே நடத்தி முடிப்பது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது. இந்த வீட்டில் ஒசாமா தனது இளைய மனைவியோடு இருப்பதை அப்போடாபாத் நகரிலேயே முகாமிட்டிருந்த சிஐஏவின் உளவாளிகள் மீண்டும் திட்டவட்டமாக கடந்த வாரம் உறுதிப்படுத்தவே, அந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தி ஒசாமைவைக் கொல்ல கடந்த வெள்ளிக்கிழமை ஒபாமா கையெழுத்து போட்டு அனுமதி தந்தார்.

இதையடுத்து நேற்று நள்ளிரவு 1.20 மணியளவில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்திலிருந்து சில ஹெலிகாப்டர்களில் கிளம்பிய அமெரிக்கப் படையினரும், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து கிளம்பிய ஒரு படையும் இந்த வீட்டை முற்றுகையிட்டன.

மிகச் சிறிய அளவிலான இந்தப் படை தனது பயங்கர தாக்குதலைத் தொடங்க, ஒசாமா பின் லேடனின் பாதுகாவலர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந் நிலையி்ல் ஒசாமா பின் லேடனே நேரடியாக அமெரிக்கப் படைகளுடன் மோதியுள்ளார்.

இதில் உடல் துளைக்கப்பட்டு ஒசாமா பின் லேடன் அந்த இடத்திலேயே பலியானார். இதில் ஒரு குண்டு ஒசாமாவின் கண்ணை துளைத்துக் கொண்டு மூளையை சிதறடித்தது. அவருடன் அவரது மகன், ஒரு பெண் உள்பட 5 பேரும் பலியாயினர்.

40 நிமிடத்தில் இந்த ஆபரேசனை முடித்துவிட்டு ஒசாமாவின் உடலை தூக்கிக் கொண்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் கிளம்பின.

இதில் ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட, அந்த ஹெலிகாப்டரை அங்கேயே விட்டுவிட்டு மற்ற ஹெலிகாப்டர்கள் பறந்தன. தரையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு, உளவு காரணங்களுக்காக மற்ற ஹெலிகாப்டர்கள் குண்டுவீசித் தகர்த்துவிட்டு, ஒசாமாவின் உடலோடு ஆப்கானிஸ்தான் நோக்கிப் பறந்தன.

இந்தத் தாக்குதலை நடத்தியது எந்தப் படை என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. ஆனாலும் U.S. Navy SEALs அதிரடிப் படை தான் இந்த ஆபரேசனை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

இறந்தது ஒசாமா தானா என்பதை facial recognition மற்றும் டிஎன்ஏ சோதனைகள் மூலம் அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

இந்த முழு ஆபரேசனையும் அமெரிக்காவிலிருந்து ஒருங்கிணைத்த சிஐஏ குழுவுடன் அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் முழு அளவில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டார்: ஒபாமா அறிவிப்பு

வாஷிங்டன்: வாஷிங்டன்: சர்வதேச அளவில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்திய, அமெரிக்காவை ஆட்டிப்படைத்து, அலைய விட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.


இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி என்றும் ஒபாமா வர்ணித்துள்ளார்.

இதுகுறித்து முப்படைத் தளபதிகள் புடை சூழ வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்லேடன் பதுங்கியுள்ள இடம் குறித்த உறுதியான தகவல் படையினருக்குக் கிடைத்ததும் என்னிடம் தெரிவித்தனர். நான் உடனடியாக தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். அதன்படி நடந்துள்ளது.

இத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. தொடர்ந்து அதில் ஈடுபடுவோம் என்றார்.

அதிபர் ஒபாமா மேலும் கூறுகையில், இஸ்லாமாபாத் அருகே உள்ள அப்போடாபாத் என்ற இடத்தில் பின்லேடன் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் உறுதிபடத் தெரிவித்தன. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு இடத்தை அமெரிக்கப் படையினர் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர்.

பின்லேடன் அங்கு தங்கியிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அங்கு புகுந்து தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். இதையடுத்து சிறிய அமெரிக்கப் படைக் குழு அங்கு புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த தீவிரவாதிகளுக்கும், அமெரிக்கப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதன் இறுதியில் பின்லேடன் கொல்லப்பட்டார். பின்லேடனின் உடலை படையினர் கைப்பற்றினர் என்றார்.

டிஎன்ஏ பரிசோதனையின்படி பலியானது ஒசாமா தான் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில்...

பின்லேடன் கொல்லப்பட்ட இடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அந்த இடத்தின் பெயர் அப்போடாபாத். இது இஸ்லாமாபாத்திலிருந்து 2 மணி நேர தொலைவில் உள்ளது. கல்வி நிறுவனங்களுக்குப் பெயர் போனது இந்த நகரம். மேலும் இந்தப் பகுதியில் பல தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் மிகச் சிறந்த சுற்றுலாத்தளமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள ஒரு மேன்சனில் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார் பின்லேடன். இங்கு தங்கியிருந்த பெண்களும், குழந்தைகளும் மீட்கப்பட்டு அமெரிக்கப் படையினரிடம் சிக்கியுள்ளனர்.

பின்லேடன், அமெரிக்காவின் தேடுதல் நபர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத் தாக்குதல் உள்பட உலகெங்கும் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணகர்த்தாவாக, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் பின் லேடன்.
 
2010-2011 www.christosebastin.blogspot.com