Sunday, February 13, 2011

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கருணாநிதியையும் சேர்க்க வேண்டும்: ஜெயலலிதா


2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது  குடும்ப உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:ஊழல் விஷயத்தில் 1969 முதல் இன்று வரை ஒரே மாதிரியான கொள்கையைந்க் கடைபிடித்து வருகிறார் முதல்வர் கருணாநிதி.
அவரது துணைவி தர்மா என்ற ராசாத்தியம்மாள், சென்னை, ராஜா அண்ணாமலைபுரம்  முதல் குறுக்குத் தெருவில் கதவு எண் 9-ல் உள்ள வீட்டினை வாங்கியது தொடர்பாக சர்க்காரியா விசாரணை ஆணையம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளிவிவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலைமை நீதிபதி சர்க்காரியாவுக்கு ஏற்பட்டது. இதற்காக அவர் மீது அனுதாபப்படத் தான் முடியும்.  எனவே, விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று கருணாநிதிக்கு நீதிபதி சர்க்காரியா சான்றிதழ் கொடுத்ததில் ஆச்சரியம் இல்லை.
2ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணையிலும் இதே போன்ற விஞ்ஞானப் பூர்வமான ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மும்பை கட்டுமானத் துறையைச் சேர்ந்த “டைனமிக்ஸ் பால்வா’ என்ற நிறுவனத்தால் புதிதாக தொடங்கப்பட்ட “ஸ்வான்’ டெலிகாம் நிறுவனத்துக்குகு, அரிதான 2ஜி அலைக்கற்றையை அடிமாட்டு
விலையான ரூ.1,537 கோடிக்கு முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசா அளித்துள்ளார். அதன் பிறகு, டைனமிக்ஸ் பால்வா நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை யு.ஏ.இ. நாட்டைச் சேர்ந்த “எடிசலாட்’ நிறுவனத்துக்கு ரூ.4,200 கோடிக்கு விற்றது. இந்த அளவுக்கு லாபம் பெற உதவி புரிந்ததற்காக, ராசாவின் குருவான கருணாநிதிக்கு டைனமிக்ஸ் பால்வா அதிபர் பால்வா லஞ்சம் கொடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தப் பணம் நேரடியாகக் கொடுக்கப்படவில்லையாம். வருமான வரித் துறையினரின் கண்களிலிருந்து தப்புவதற்காக, தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் 11 நிறுவனங்களிலிருந்து ரூ.25 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை மொத்தம் ரூ.209.25 கோடியை ஆசிப் பால்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான “குசேகான் ஃப்ரூட்ஸ்,  வெஜிடெபிள்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு பால்வா மாற்றியிருக்கிறாராம்.
குசேகான் நிறுவனம் இதிலிருந்து ரூ.206.25 கோடியை பால்வாஸ் மற்றும் மொரானிக்கு சொந்தமான சினியுக் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்கு கொடுத்துள்ளதாம்.
இந்த சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 2009-2010-ம் ஆண்டின் இருப்புநிலைக் குறிப்பை பார்க்கும்போது, கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோர் 80 சதவீத பங்குகளைப் பெற்றுள்ள கலைஞர் டி.வி.க்கு, உத்தரவாதமற்ற கடனாக ரூ. 206 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளதாம்.
முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் 2ஜி அலைக்கற்றை ஊழலில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்களே. இதைச் செய்தால்  மட்டுமே அனைத்து உண்மைகளும் வெளிவரும். அப்போதுதான் நீதி நிலைநாட்டப்படும்’ என்று கூறியுள்ளார் ஜெயலலிதா

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com