Tuesday, February 15, 2011

சில்க் பற்றிய படத்திற்கு எதிர்ப்பு...?


தென்னிந்திய தாரகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தி டர்ட்டி பிக்சர்' Silk Smithaஎன்ற பெயரில் இந்தியில் படமாக எடுத்து வருகிறார்கள். சில்க் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார். வேக வேகமாக வளர்ந்து வருகிற இந்த படம் குறித்த தகவல்கள் மீடியாவில் வெளியாகிக் கொண்டிருக்க, தனது முரட்டு மீசையை முறுக்கிக் கொண்டு படத்திற்கு தடை கோர தயாராகிக் கொண்டிருக்கிறார் பிரபல நடிகர் வினு சக்கரவர்த்தி. சில்க் கதையை யார் படமாக்கினால் இவருக்கென்ன என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்தாலும், இவர் இல்லையென்றால் சில்க் என்ற நடிகையே இல்லை என்பது கோடம்பாக்கத்திற்கு நன்றாகவே தெரியும்.
அவரது கோபத்தை கேள்விப்பட்ட நாம் தமிழ்சினிமா.காம் சார்பாக அவரை சந்தித்தோம். துக்கமும் ஆத்திரமும் வழிந்தோட பேச ஆரம்பித்தார் வினு சக்கரவர்த்தி.

பதினெட்டு வயசுல சில்க்கை ஓரிடத்தில் பார்த்து சினிமாவில் நடிக்க அழைச்சிட்டு வந்தவன் நான். அவருக்கு சில்க் ஸ்மிதான்னு பேரு வச்சதும் நான்தான். ஒரு வருஷம் எப்படி இருக்கணும், எப்படி பழகணும்னு சொல்லிக் கொடுத்து 19 வயசுல நடிக்க வச்சேன். இந்த கேரக்டர்ல நடிக்கணும்னு ஸ்ரீப்ரியா, தீபா ரெண்டு பேரும் ஆசைப்பட்டாங்க. ஆனால் இவரைதான் நடிக்க வைக்கணும்னு பிடிவாதமா அறிமுகப்படுத்தினேன். வண்டிச்சக்கரம் படத்தில் வடிவுங்கிற அந்த கேரக்டரை உருவாக்கி நடிக்க வச்சதோட முடிஞ்சு போகல எனக்கும் சில்குக்குமான சம்பந்தம். முப்பது வயசுல அந்த பொண்ணு சாகிற வரைக்கும் ஒண்ணா இருந்திருக்கோம்.
தான் யாரு? அப்பா அம்மா யாரு? ஆறு வயசுலேர்ந்து பட்ட துன்பம் என்ன? காதல்னா Vinu chakravarthyஎன்ன? செக்சுன்னா என்ன?ன்னு எங்கிட்ட அந்த பொண்ணு சொல்லாத விஷயமே இல்ல. சில்க்குங்கறது தனி மனுஷி இல்ல. அதே நேரத்தில் காந்தி, நேருவோட கதையை எடுக்கிற மாதிரி அவரை பொதுவானவரா கருதி யாரு வேணும்னாலும் சில்க் பற்றி படம் எடுத்திட முடியாது. அவரோட 24 வருஷ வாழ்க்கையை என்னைவிட நல்லா தெரிஞ்சவன் யாருமே இல்ல. அப்படியிருக்கும் போது அவரை இந்த சினிமாவுக்கு அறிமுகப்படுத்தின எங்கிட்ட பர்மிஷன் வாங்கணுமா வேணாமா? இப்படி ஒரு படம் எடுக்கப் போறோம்னு என் காலில் விழுந்து கேட்டிருந்தா ஆசிர்வாதம் பண்ணியிருப்பேன். நானே சில்க் வாழ்க்கையில் நடந்த உலகத்திற்கு தெரியாத பல விஷயங்களை சொல்லியிருப்பேனே? என்னிடம் கேட்கலையேங்கிற வருத்தம்தான் கோபமா மாறியிருக்கு.

நான் உடல்நிலை சரியில்லாம மூணு வருஷம் லண்டன்ல இருக்கிற மகள் வீட்டுக்கு போயிட்டேன். திரும்பி வந்தபின்புதான் இப்படி ஒரு விஷயம் நடந்திருக்குன்னே தெரிஞ்சுது. ரொம்ப அதிர்ச்சியாகிட்டேன்.

சில்க்கோட ஸ்பெஷலே அவரோட கண்ணுதான். ஆனால் இந்த வித்யா பாலன் Vidya balanகண்ணை சில்க் கண்ணோட ஒப்பிட்டு பார்க்க முடியுமா? சில்க் வேடத்தில் நடிக்கிற தகுதி தீபிகா படுகோனேவுக்கும், ஐஸ்வர்யா ராயுக்கும்தான் இருக்கு. தமிழ்ல எடுத்தா நமீதாவை வச்சு எடுக்கலாம். நான் கூட நமீதாவை பார்க்கும்போது இந்த விஷயத்தை சொல்லியிருக்கேன். இப்பவும் கெட்டுப் போயிடல. சில்க்கை பற்றி வெளிவராத பல தகவல்களுடன் நானே ஒரு படத்தை எடுப்பேன். அதில் நமீதா நடிப்பார்.
ஆனால் அதுக்கு முன்னாடி வரப்போற இந்த படத்தை வெளிவர விடமாட்டேன். எடுக்கற வரைக்கும் சும்மாயிருப்பேன். படத்தை எங்கிட்ட போட்டுக்காட்டணும். அதுக்கு சம்மதிக்கலைன்னா படத்தை வெளியிட தடை கோரி வழக்கு போடுவேன். சில்க் கதையை நான் எழுதி பிலிம் ரைட்டர்ஸ் யூனியன்ல பதிவு பண்ணி பல வருஷங்கள் ஆச்சு. அதுக்கான ஆதாரங்களும் எங்கிட்ட இருக்கு. யாரும் தப்பவே முடியாது என்று சீறினார் வினுச்சக்கரவர்த்தி.

சில்க் என்றாலே பரபரப்புதான் போலிருக்கிறது!


No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com