Saturday, February 12, 2011

கூகிள் பற்றி சுவையான தகவல்கள்

ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

கேள்வி: இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்? வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.

""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்த࠮?ன் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''

இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.

லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.

கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது

நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?

கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com