Monday, February 14, 2011

பீற்றூட் கறி. இரத்த அழுத்தத்தை குறைக்க.....


பீற்றூட் என்னும் சிவப்புக் கிழங்கை நாம் எல்லோரும் கண்டிருப்போம்.
ஆனால்... பலர் அதைச் சமைத்திருப்பார்களா என்பது சந்தேகமே...
உண்மையில் இது மக்னீசியம், கல்சியம், விற்ரமின் சி என்று நமது உடலுப்புகளுக்குத் தேவையான அளவு தாதுப் பொருட்கள் நிறைந்த கிழங்கு.
இது... ஐரோப்பிய நாடுகளில் கோடை காலத்தில் சந்தையில் வாங்கலாம். குளிர் காலத்தில் இதனை காற்றுப் புகாத முறையில் பைகளில் அடைத்து விற்பார்கள்.
ஃ இதனை வருடம் முழுக்க கிடைக்கும் மரக்கறி என்று சொல்லலாம்.



பீற்றூட் கறி செய்ய தேவையான பொருட்கள்.

இரண்டு பீற்றூட் (400 - 500கிராம்)
வெங்காயம் - 2
கடுகு இரண்டு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி
செத்தல் மிளகாய் - 4
கருவேப்பிலை
தாழிக்க சிறிதளவு எண்ணை
சுவைக்கேற்ப உப்பு.
அலங்கரிக்க பச்சை மிளகாய் - 1


செய்முறை;

பீற்றூட்டை வெட்ட முதல் அதன் தோலுடன் கழுவவும்,
இனி.... அதன் தோலை சீவிய பின்.... சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
அடுப்பில் தாச்சியை வைத்து, சிறிது எண்ணை விட்டு.... அரிந்த வெங்காயம் போட்டு சிறிது வதங்கிய பின்.....
கடுகு, பெருஞ்சீரகம், சிறிதாக வெட்டிய செத்தல் போன்றவற்றை போட்டு கடுகு வெடித்து, வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
இப்போ.... வெட்டிய பீற்றூட்டையும், உப்பையும் போட்டு கிளறவும்.
பீற்றூட் இலையுடன் கிடைத்தால்....
கொஞ்ச இலை, தண்டை சிறிதாக வெட்டிப் போடவும்.
தாச்சியில் மிகச்சிறிதளவு (3 மேசைக்கரண்டி) நீர் மட்டுமே விட்டு, கருவேப்பிலையை போட்டு மூடி கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த பின் சிறிது பசுப்பால் விட்டு.... மூடாமல் கிளறவும்.

இது நன்கு அவிய வேண்டும் என்று பார்க்காமல், அரை அவியலிலேயே இறக்கலாம்.
முக்கியமானது இதில் அதிக நீர் விடாமல் பிரட்டல் கறி போல் இருந்தால் நல்லது.
இதனை சோற்றுடன் சாப்பிட சுவையாகவும், சிறிய பிள்ளைகள் அதன் நிறத்திற்காகவும் விரும்பி உண்பார்கள்.
இது சமைக்கும் நாளில் மீன் கறி, போஞ்சி பால் கறி, பருப்புக் கறி, கீரைக்கறி போன்றவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால்......
சாப்பாட்டை இரண்டாம் முறையும் போட்டுச் சாப்பிடுவீர்கள் என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com