Wednesday, February 16, 2011

எஸ்.ஏ. சந்திரசேகர்:"எந்த சமாதானத்திற்கும் இடமில்லை. திமுக எதிர்ப்பு எதிர்ப்புதான்..!"

கூட்டணிக் கட்சித் தலைவர்களே ஜெயலலிதாவைச் சந்திக்க காத்துக் கிடக்கும்போது, எஸ்.ஏ. சந்திரசேகருக்கு மட்டும் போயஸ்கார்டன் கதவுகள் திறந்திருக்கின்றன. தி.மு.க.வை விமர்சிப்பதில் விஜயகாந்துக்கு அடுத்த இடம் எஸ்.ஏ.சி.க்குத்தான். வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் செய்யப் போகிறார் என்பதுதான் இளைஞர்களிடையே இப்போது ஹாட் டாபிக். ‘சட்டப்படி குற்றம்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருந்த எஸ்.ஏ.சி.யைச் சந்தித்தோம்.
‘காவலன்’ படத்தில் ஆளுங்கட்சியினர் செய்த இடையூறுதான் உங்களை தி.மு.க.விற்கு எதிராகப் பேச வைத்துள்ளதா?

“அதுவும் ஒரு காரணம். ‘நாட்டுக்காக உழைக்கிறோம்’ என்று சொல்கிறவர்களே இங்கு மக்களைச் சுரண்டுகிறார்கள். ஊழல்களில் மெகா ஊழலாக போபர்ஸ் ஊழலைச் சொல்வார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி மகா மெகா ஊழலைச் செய்திருப்பதாக குற்றம்
சாட்டப்பட்டு ராசா கைதாகி இருக்கிறார். தப்பு செய்தவரை விட அதைச் செய்யத் தூண்டுவதுதான் மிகப் பெரிய குற்றம். தவறிழைத்தவர்களைக் காப்பற்ற நினைப்பது சட்டப்படி மோசமான குற்றம்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வன்முறை அதிகமாகி விட்டது. ஆந்திராவில் ராயலசீமாவை ரத்த பூமியென சொல்வார்கள். இப்போது தமிழ்நாடும் ரத்தபூமியாகி விட்டது. போலீஸ் அதிகாரியின் பெண்ணைக் காதலித்த மாணவனைக் காணோமாம். காதலிப்பது குற்றமா? ஒரு அரசியல்வாதி வெற்றிபெறுகிற நிலையில், எதிர்த்தரப்பில் பணம் வாங்கிக்கொண்டு விலகி விட்டானாம்.

‘நீ இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டே, நான் இருநூறு கோடி வாங்கிக் கொண்டு விலகி விட்டேன்’ என்கிறான். இந்த நிலைமை மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.’’

இதற்காகத்தான் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றினீர்களா?’

“நான் சினிமாவுக்கு வந்ததே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். விஜய் என்கிற சக்தியை கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறான். விஜய்யின் பின் னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்தி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறேன்.

அவர்கள் வெறும் ரசிகர்களாக, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பிளாக்கில் டிக்கெட் வாங்கி விற்கக் கூடாது என்று நினைத்துத்தான் ‘மக்கள் தொண்டனாக’ மாற்றியிருக்கிறேன். இந்த மக்கள் இயக்கத்தின் தலைவர் விஜய். நான், வழி நடத்திச் செல்கிற உந்து சக்திதான். எங்கள் இயக்கம் அரசியல் கலப்பு இல்லாமல் செல்கிற சமூக இயக்கம்.’’

அப்படியானால் ஜெயலலிதாவை இரண்டு தடவை சந்தித்தது ஏன்?

“இப்போது இந்த நாட்டுக்கு நல்ல அரசு தேவை என்கிற உணர்வில் இருக்கிறேன். அதை வெளிப்படுத்துவதற்காகத்தான் நான் அவரைச் சந்தித்தேன். களங்கமற்ற அரசு வேண்டும், லஞ்சம் வாங்காத அரசு அதிகாரிகள் இருக்க வேண்டும், ஊழல் அற்ற அரசு வேண்டும்என்கிறஎனது ஆசைகளை வெளிப்படுத்தத்தான் அவரைச் சந்தித்துப் பேசினேன்.’’

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைப்பதற்காக நீங்கள் ஜெயலலிதாவைச் சந்தித்த தாகவும் பேச்சு நிலவுகிறதே?

“விஜயகாந்த் எனது நல்ல நண்பர். எனக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர். அவரை சந்தித்த போதும் நான் ஜெயலலிதாவிடம் என்ன சொன்னேனோ அதைத்தான் சொன்னேன். மற்றபடி இடைத் தரகராகவோ, இணைப்புப் பாலமாகவோ நான் வேலை செய்யவில்லை. நல்லது நடக்க வேண்டும் என்கிற ஆசையில் சந்தித்தேன். அவ்வளவுதான்.’’


விஷய்யின் அரசியல் ஆசையில் குழப்பம் இருப்பதாகத் தெரிகிறதே? அவர் அரசியலில் நேரடியாக இறங்கப் போகிறாரா, அல்லது வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் மட்டும் செய்வாரா?

“விஜய்க்கு எந்தக் குழப்பமும் இல்லை. அவருக்கு இப்போது 35 வயதுதான் ஆகிறது. அவர் அரசியலுக்கு வருவதை நூறு சதவிகித மக்களும் ஏற்க வேண்டும். அப்போதுதான் அவர் அரசியலுக்கு வருவது சரியாக இருக்கும்.

அதற்கான பக்குவம் விஜய்க்கும் நாற்பது வயதில்தான் வரும் என நினைக்கிறேன். இப்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்ல முடியும். இப்போது எங்களுடைய பணி, மக்களை ஏமாற்றி சுரண்டுகிறவர்களை அடையாளம் காட்டுவது மட்டும்தான். தமிழக மக்களுக்கு நல்லாட்சியை, தூய்மையான ஆட்சியைத் தரக் கூடியவர்களை அடையாளம் காட்டும் பணி எங்களுக்கு இருக்கிறது.’’

தி.மு.க. மத்திய அமைச்சர் ஒருவர் விஷய்யை டில்லிக்கு அழைத்துச் சென்றபோது மனக்கசப்பு ஏற்பட்டது. அதன் விளைவாகத்தான் விஷய் பழிவாங்கப்படுகிறார் என்கிற செய்தி உண்மையா?

“அந்த அமைச்சருக்கு விஜய்யை தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும். டெல்லியில் விஜய்க்கு மனக்கசப்பு ஏற்படும் வகையில் எதுவும் நடக்கவில்லை.

நானும், விஜய்யும் ராகுல் காந்தியைச் சந்தித்தபோது, ‘அப்பாதான் அரசியலுக்கு வருவார். நான் இப்போது வரப்போவதில்லை’ என்று ராகுலிடம்விஜய் தெளிவாகவே சொல்லிவிட்டார். நான் மட்டும் அரசியலுக்குச் சென்று என்ன பயன்? எனக்கு அரசியல் நன்றாகத் தெரியும். எப்படி மக்களை அணுகுவது என்பதும் தெரியும். ஆனால் அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும் என்றால், எங்கள் மக்கள் இயக்கத் தொண்டர்களுக்கு எதுவும் செய்யாமல் நான் மட்டும் பதவி வாங்கி என்ன பயன்?’’

வரும் தேர்தலில் நீங்கள் புதுக்கோட்டையில் நிற்கப் போகிறீர்களாமே?

“நான் நிற்பதைவிட எங்கள் தொண்டர்கள் எங்கே நிற்பார்கள் என்பதுதான் கேள்வி. அவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் நிற்பது சுயநலம். மக்கள் இயக்கத் தொண் டர்களுக்கு ஏதாவது செய்தால் நான் முழு வீச்சில் தீவிர அரசியலில் இறங்குவேன். இது உறுதி!’’

உங்களுடன் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் சமாதானம் பேசுவதாக கூறப்படுவது உண்மையா?

‘‘எம்.ஜி.ஆர். பவர்ஃபுல்லாக இருந்த நேரம். சட்டப் புத்தகத்தை எரித்ததாக கலைஞரைக் கைது செய்து விட்டனர். அப்போது என்னுடைய ‘நீதிக்கு தண்டனை’ படம் வெளிவந்தது. படத்தின் விளம்பரத்தில் கூண்டுக்குள் கலைஞர் இருப்பதைப் போலவும், கூண்டுக்கு வெளியில் ராதிகா நிற்பதுபோலவும் விளம்பரம் வெளியிட்டேன். அப்போது அரசியல் சார்பற்று இருந்த நான் எனக்கு நியாயம் எனப் பட்டதை செய்து காட்டினேன்.

அப்படியிருக்கும்போது என் மகனின் படத்துக்கு நெருக்கடி கொடுத்தார்கள். நடப்பது கலைஞர் ஆட்சியா, சன் டி.வி ஆட்சியா என்று நினைக்கிற அளவுக்கு நிகழ்ச்சிகள் நடந்தன. இதெல்லாம் அந்த முதலாளிக்குத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் கீழே இருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ‘காவலன்’ படம் ஓடக் கூடாது என் பதற்காக அவர்களின் தொலைக்காட்சியில் என் மகனின் பழைய திரைப்படங்களை ஒளிபரப்பினார்கள். என் மகனின் முகத்தை அழிப்பதற்கு என் மகனின் முகத்தையே பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் என்னை வந்து சந்திப்பார்களா?’’ என்றார்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com