ஊழல் பிரச்சினையில் பா.ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுவதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி குற்றம் சாட்டி உள்ளது.பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத்,2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய அளவிலான பா.ஜனதா கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை அந்த கட்சியின் முதல் மந்திரி எடியூரப்பா நில ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டில் சிக்கி உள்ளார்.
இதற்கு அந்த கட்சியின் தேசிய தலைவர் கூறும்போது, எடியூரப்பா மீது குற்றம் இல்லை. இது சட்ட விரோதமாக நடைபெறவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை தேவையில்லை என்று கூறுகிறார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு மற்றும் ஊழல் வழக்குகளில் எடியூரப்பாவுக்கு உள்ள தொடர்பு, அவருடைய மகனுக்கு முறைகேடாக நில ஒதுக்கீடு செய்து கொடுத்தது ஆகியவற்றிற்கு உள்ள வித்தியாசம் குறித்து, பா.ஜனதா கட்சியின் தலைமை பதில் அளிக்க வேண்டும். தங்கள் கட்சியின் தலைவர் ஒருவரே சட்டவிரோதமான நடவடிக்கைகளில் தொடர்புடையவராய் இருக்கும்போது, மற்ற கட்சிகளின் மீது ஊழல் குற்றச்சாற்றுகளை சுமத்துவதற்குரிய நம்பகத்தன்மையை அந்த கட்சி இழந்து விட்டது.
ஊழல் பிரச்சினையில் அந்த கட்சி இரட்டை கொள்கைகளை கடைபிடித்து வருகிறது. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஒரு விதமாகவும், மற்றொருபுறம் எடியூரப்பா விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகவும் நடந்து கொள்கிறது.
அதிகரித்து வரும் அத்தியாவசிய பண்டங்களின் விலைவாசியை கட்டுப்படுத்த மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறிவிட்டது. உணவு பாதுகாப்புக்கு சட்டம் கொண்டு வர அந்த அரசு முன்வர வேண்டும். அதன்படி, குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசி வழங்க வேண்டும் அல்லது கிலோ ரூ.2 என்ற விலையில் கோதுமை வழங்க வேண்டும். வெகு விரைவில் இந்த சட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment