புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் "2ஜி' முறைகேடு குறித்த வழக்கில், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, டில்லி கோர்ட்டில், சி.பி.ஐ., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜாவிடம் விசாரணை நடத்த வலியுறுத்தி, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான முந்தைய விசாரணையின் போது, "ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுப்ரமணியசாமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறதா' என, சி.பி.ஐ.,யிடம் கோர்ட் விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து சி.பி.ஐ., சார்பில் நேற்று கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த வழக்கு பதிவு செய்யபட்டவுடன், தொலைத்தொடர்பு துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உட்பட பலருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனைகளின் போது, ஏராளமான ஆவணங்களை சி.பி.ஐ., கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக பலரிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ராஜா உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால், உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுப்ரமணியசாமி புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுவது குறித்த விவரங்களை சி.பி.ஐ., அறிந்திருக்கவில்லை. இது தொடர்பான அவரின் புகார் மனுவின் நகல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரமணியசாமி தரப்பில், "ஸ்பெக்ட்ரம் "2ஜி' முறைகேடு தொடர்பாக ராஜா மீதும் மற்றவர்கள் மீதும் தொடர்ந்துள்ள வழக்கையும், நான் தனியாக அளித்துள்ள புகார் மீதான வழக்கையும் ஒன்றாக சேர்த்து விசாரிப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. பொதுமக்கள் நலனுக்காகவே நான் உழைக்கிறேன்' என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதன்பின், நீதிபதி பிரதீப் சத்தா கூறுகையில், "ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாகித் பால்வாவுக்கு சொந்தமாக, குஜராத்தின் பலான்பூரில் சட்ட விரோதமாக விமான நிலையம் செயல்பட்டு வருவதாக சுப்ரமணியசாமி புகார் தெரிவித்துள்ளார். அதுகுறித்தும் தகவல் தரலாம் என நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment