Monday, February 14, 2011

தமிழகத் சட்டசபை தேர்தல் முக்கிய தலைவர்களுக்கு விடுதலைப் புலிகள் குறி-மத்திய உளவுப் பிரிவினர் எச்சரிக்கை


சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது முக்கிய தலைவர்களை விடுதலைப் புலிகள் குறி வைத்து தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள எச்சரிக்கையில், சில விடுதலைப் புலிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ளதாகவும், தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஆயுதங்கள், வெடி மருந்துகள் வாங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு ரகசிய இடத்தில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான பணிகள் கடந்த டிசம்பரிலேயே முடிந்திருக்கலாம் என்றும் இந்த தாக்குதல் பணிகளை ஒருங்கிணைக்க புலிகளின் நிதிப் பிரிவைச் சேர்ந்த முக்கிய நபர்களும் விமானப் படைப் பிரிவைச் சேர்ந்த சிலரும் தமிழகத்துக்குள் ஊடுருவியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இப்போது இலங்கை ராணுவத்திடம் சிக்கியுள்ள புலிகள் தந்துள்ள தகவலின்படி சென்னை வளசரவாக்கத்தில் எல்டிடிஈயினர் நீண்ட காலமாகவே தங்கியிருப்பதாகவும், இப்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ள தாக்குதலுக்கு இவர்கள் உதவலாம் என்றும் மத்திய உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்குத் தகவல் தந்துள்ளது.

மேலும் புலிகளின் தற்கொலைப் படையினரில் ஒரு பிரிவினர் நாகர்கோவிலுக்குள் அகதிகள் என்ற பெயரில் ஊடுருவியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இயக்கப்படும் தோணிகள் மூலம் இவர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவுவது சாதாரணமாகிவிட்டதாகவும், இதனால் தமிழக கடலோரப் பகுதியின் பாதுகாப்பு அபாயகரமானதாகி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரதமர், தேசிய பாதுகாப்புத்துறைச் செயலாளர், தமிழக முதல்வர் ஆகியோர் புலிகளின் முக்கிய குறிகளாக இருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டமே இல்லை என்று போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இல்லை. அவர்களது ஊடுருவலைத் தடுக்க கடலோர பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடலோரப் பாதுகாப்புப் பிரிவு போலீசார் தொடர்ந்து கடலோர கிராம மக்கள் நுண்ணரிவுப் பிரிவினருடன் தொடர்பில் இருக்கிறார்கள். எந்தப் பகுதியிலும் அன்னியர்கள் வந்திறங்கினாலும் தகவல் வந்துவிடும்.

முக்கிய பிரமுகர்கள் தமிழ் நாட்டுக்கு வரும் நேரங்களில் எல்லாம் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் உஷாராக இருக்குமாறு எச்சரிக்கை தகவல்களை அனுப்புவார்கள். இது வழக்கமானது தான். அதே நேரத்தில் எந்த எச்சரிக்கையையும் காவல்துறை சாதாரணமாக எடுத்துக் கொள்வது இல்லை. அதை மிகக் கவனமாக பரிசீலித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இலங்கை அகதிகள் முகாம்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com