Thursday, February 17, 2011

இன்று உலக்கோப்பை கிரிக்கெட் திருவிழா துவக்கம்


பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட்டின் துவக்கவிழா இன்று தாகாவில் நடக்கிறது. இரண்டே கால் மணி நேரம் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைய உள்ளது.இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து பத்தாவது உலக கோப்பை தொடரை நடத்துகின்றன. போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் துவங்குகின்றன. இதன் துவக்கவிழா இன்று வங்கதேசத்தின் பங்கபந்து தேசிய விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடக்கிறது.
வங்கதேசம் சுதந்திரம் அடைந்த பின் நடக்கும் "மெகா' விளையாட்டு தொடர் என்பதால், உலகத்தின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்க, இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தீர்மானித்துள்ளது. 135 நிமிடங்கள் நடக்கும் துவக்கவிழா நிகழ்ச்சிகள் இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த விழாவில் பிரபல பாடகர் பிரயான் ஆடம்ஸ், இந்திய பாடகர் சோனு நிகாம் போன்றவர்கள் பங்கேற்கின்றனர்.
அதற்கு முன்பாக மாலை 4 மணிக்கு, எட்டு முன்னணி வங்கதேச பாடகர்கள் பங்கேற்கும் 50 நிமிட நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் பிரபல இசைக் கலைஞர்கள் ருனா லைலா, சபீனா யாஷ்மின், கிராமிய பாடகர் மும்தாஜ் பேகம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஷங்கர், ஈசான், லாய் என்ற மூன்று இந்திய இசையமைப்பாளர்கள் இணைந்து பத்தாவது உலக கோப்பை தொடரின் "தீம்' பாடலை, இந்தி, இலங்கை, வங்கதேச மொழிகளில் அறிமுகம் செய்கின்றனர். இதற்குப்பின் 14 நாடுகள் பங்கேற்கும் 42 நாட்கள் நடக்கும் கிரிக்கெட் தொடரை வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, முறைப்படி அறிவித்து துவக்கி வைக்கிறார். அடுத்து வங்கதேச நிதியமைச்சர் முகித், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆசாத் அலி சர்கார், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சரத் பவார், வங்கதேச கிரிக்கெட் போர்டின் தலைவர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.அடுத்து அலங்கரிக்கப்பட்ட ரிக்ஷாவில், 14 அணியின் கேப்டன்களும், மைதானத்துக்குள் அழைத்து வரப்படுவார்கள். பின் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள, வங்கதேசத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் ராட்சத உருவப்படத்தை, பிரதமர் ஷேக் ஹசீனா திறந்து வைக்கிறார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
கிரிக்கெட் திருவிழாவை காரணமாக வங்கதேசத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. துவக்கவிழா நடக்கும் இன்று, பிப். 19 (இந்தியா-வங்கதேசம்) மற்றும் மார்ச் 19 (வங்கதேசம்-தென் ஆப்ரிக்கா) என மூன்று நாட்கள், தாகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதாக, கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com