Wednesday, February 16, 2011

மறுக்க முடியாத நிலையில் திமுக "ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்"

 
ராசா கைதோடு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இருந்து தி.மு.க.வின் பெயர் விடுபட்டு விடும் என்றுதான் தி.மு.க.வினர் நினைத்திருந்தனர். ஆனால் ராசா கைதுக்குப் பிறகு, க ருணாநிதி குடும்பத்தினர் பெயர் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்க, கதிகலங்கிப் போயுள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவை சி.பி.ஐ. கடந்த வாரம் கைது செய்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணம் கலைஞர் தொலைக்காட்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என பாட்டியாலா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்தது. ஆனாலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடர்வதால் காங்கிரஸ் தன்னைக் காப்பாற்றும் என தி.மு.க. நம்புகிறது.

அதே நேரத்தில், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் இரு தரப்பிலும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தங்களை வந்து சந்திக்கும் என தி.மு.க எதிர்பார்த்தது. திடீர் திருப்பமாக, ‘‘எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகளைக் கலந்து ஆலோசித்து விட்டு தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த வருகிறோம்’’ என காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்தார்.

காங்கிரஸின் இந்தப் போக்கு தி.மு.க.விற்கு எரிச்சலை உண்டாக்கினாலும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்காங்கிரஸ்தயவு தேவைப்படுவதால் அமைதியாக நடப்பவைகளை வேடிக்கை பார்ப்பதைத் தவிர தி.மு.க.விற்கு இப்போதைக்கு வேறு வழியில்லை.

காங்கிரஸ் அறிவித்தபடி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் 13-ம் தேதி தொடங்கியது.

காலை 9.30 மணிக்குத் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த கூட்டம் காங்கிரஸ் வழக்கப்படி காலை 11.30 மணிக்குத் தொடங்கியது. ஐவர் குழு வருவதற்கு முன்னரே சத் தியமூர்த்தி பவன் நிரம்பி வழிந்தது. ஏதோ வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலுக்கு வந்தவர்களைப் போல் பல நிர்வாகிகள், குறிப்பாக சிதம்பரம் ஆதரவாளர்கள் ஃபைல் களுடன் வந்திருந்தனர்.

கூட்டம் தொடங்கியவுடன் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்றாகச் சென்று, ‘‘எங்களுடைய கருத்துக்களை நாங்கள் சேர்ந்தே சொல்கிறோம். உங்களுக்கும் நேரம் மிச்சமா கும். மற்ற நிர்வாகிகளையும் பார்க்கலாம்’’ என ஆலோசனை கூறினர்.

உடனே தங்கபாலு, சிதம்பரம் மற்றும் ஜி.கே. வாசன் காதில் ஏதோ கிசுகிசுத்து விட்டு, ‘‘மேலிட அறிவுரைப்படி உங்களை தனித்தனியாக சந்திக்கிறோம். எங்களுக்காக உங்கள் நேரத்தை செலவழியுங்கள்’’ எனக் கூறினார்.

அதன்படி முதலில் பேசிய எம்.எல்.ஏ. ஞானசேகரன், ‘‘தி.மு.க.வுடன்தான் கூட்டணி என முடிவாகியுள்ள சூழ்நிலையில் கூடுதல் சீட்டுகளையும், ஆட்சியில் பங்கும் பெற வேண்டும். இதுதான் ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கை’’ என்று கூறிவிட்டு எம்.எல்.ஏ.க்கள் சார்பாக மனுவையும் கொடுத்தார்.

மனுவில், ‘‘சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் ஒரு சில தொகுதிகள் மாறியுள்ளதால், அதற்குப் பதிலாக அருகில் உள்ள தொகுதியைப் பெற்றுத்தர வேண்டும். 60 வயதைத் தாண்டிய எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சியில் பதவியும், இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தங்கள் கருத்தைத் தெரிவிக்க வந்த பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் வந்த வேகத்தில் திரும்பினர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பேசியபோது, ‘‘உங்களுடைய தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது. உங்களுக்கு மீண்டும் சீட் கொடுத்தால் ஜெயிப்பீர்களா? சீட் கொடுத்தால் தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்? மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எந்தளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளது. குறிப்பாக கலர் டி.வி. உங்கள் தொகுதிக்கு முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகள்தான் எல்லா எம்.எல்.ஏ.க்களிடமும் கேட்கப்பட்டது.

‘மீண்டும் சீட் கொடுத்தால் ஜெயிப்பீர்களா?’ என்ற கேள்விக்கு, தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தி.மு.க.வுடனான கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பு குறைவுதான் என்றும், ஆனால் பணம் கொடுத்தாவது ஜெயித்து விடுவேன் எனவும் சிலர் கூறியுள்ளனர்.

அப்படி என்றால் ‘உங்கள் தொகுதிக்கு எவ்வளவு பணம் செலவழிப்பீர்கள்?’ என ஐவர் குழு கேட்க, ‘5 கோடி ரூபாய் வரை செலவழிக்கத் தயார்’ என சிலர் கூற, ஐவர் குழுவே அசந்து போனது. அதோடு விடாமல், ‘இந்தப் பணம் போதாது. கட்சியில் இருந்து நீங்கள் காசு கொடுங்கள்’ என்று கூறியதும், அவர்கள் மிரட்சியில் உறைந்து போனார்கள்.



ஸ்பெக்ட்ரம் பிரச்னையை மக்கள் மறந்து விடாத நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி நமக்கு பாதிப்புதான் என சிலர் சொன்னார்கள். அப்போது சிதம்பரம் குறுக்கிட்டு, ‘அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க கூட்டணி சேர்ந்தால் நமது வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?’ எனக் கேட்க, ‘நமது கதி அதோகதிதான்’ என எம்.எல்.ஏ.க்கள் பதில் அளித்தனர்.

‘கூட்டணியில் பா.ம.க. வந்தால் நமக்கு பலம்’ என வட மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். ‘காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது தற்கொலைக்குச் சமம்’ என்பதே எ ல்லா எம்.எல்.ஏ.க்களின் கருத்தாக இருந்தது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எஸ்.ஆர்.பி., யசோதா ஆகியோரை தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் சேர்க்காதது வருத்தமளிப்பதாகவும், அவர்களுக்குத் தான் சட்டமன்றத் தொகுதிகள் குறித்து ஆழ்ந்த அறிவு இருக்கிறது எனவும் சில எம்.எல்.ஏ.க்கள் குறிப்பிட்டனர்.

தேர்தல் வேலைகளை முன்கூட்டியே ஆரம்பிக்க வசதியாக வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட வேண்டும் என்றும், கடைசி நேரத்தில் வேட்பாளர் பட் டியலை வெளியிட்டால் வெற்றி பாதிக்கும் என நிர்வாகிகள் ஐவர் குழுவிடம் தெரிவித்துள்ளனர்’’ என்று எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர்.

மொத்தமுள்ள 33 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஊட்டி எம்.எல்.ஏ. கோபால், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. ஹசன்அலி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் ஜே.எம்.ஆரூண் எம்.பி., ‘தேர்தலில் சிறுபான்மையினருக்கு 5 சதவிகிதம் சீட் கொடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வைத்துவிட்டுச் சென்றார். மாணிக் தாகூர், ‘இளைஞர்களுக்கு அதிக சீட் கொடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.

சிதம்பரம் ஆதரவாளரான, விஸ்வநாதன் எம்.பி.,

‘‘எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் போது காங்கிரஸுக்கு கவுரவமான தொகுதிகளே கிடைத்துள்ளன. இப்போது நமக்கு வெறும் 67 சீட்கள் கொடுக்க இருப்பதாக கேள்விப்பட்டேன், ராகுல்காந்தி சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, தமிழகத்தில் 15 லட்சம் உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

1967-க்கு முன்பு தமிழகத்தில் காங்கிரஸ் எவ்வளவு எழுச்சியோடு இருந்ததோ, அதே எழுச்சி இன்று உள்ளது. எனவே ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 2 தொகுதிகள் விதம் 78 சீட்டுக்களைப் பெற வேண்டும். நமக்கு எண்ணிக்கை முக்கியமல்ல. இந்திரா காந்தி இறந்தபோதும், ராஜீவ் காந்தி இறந்தபோதும் நாம் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்தது. அதை விட்டுவிட்டோம். மீண்டும் அந்த வாய்ப்பு 96-ல் வந்தது. அதையும் விட்டுவிட்டோம். மீண்டும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கவுரவமான பங்களிப்பு வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

மதிய உணவுக்காக சிதம்பரமும், வாசனும் கிளம்பிச் செல்ல, வாசன் ஆதரவு தொண்டர் ஒருவர், ‘வாசன் வாழ்க’ என கோஷமிட, கோபத்தில் தொண்டரின் கன்னத்தில் பளாரென அறைவிட்டார் வாசன். இதனை எதிர்பார்க்காத தொண்டர்கள் அதிர்ந்து போய்விட்டனர்.

அன்று மாலையே, கருணாநிதியைச் சந்தித்த ஐவர் குழு, அரை மணிநேரத்திற்கு மேலாக பல்வேறு அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதித்தனர். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் டெல்லி சென்றுவிட்டார். மீதமுள்ள நான்கு பேரும் மற்ற நிர்வாகிகளைச் சந்தித்து தொடர்ந்து கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

அப்போது, ‘‘கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால், தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும். அல்லது ராசா மீதான ஸ்பெக்ட்ரம் வழக்கின் பிடிகளை யாவது தளர்த்த வேண்டும்’’ என்று நிர்வாகிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘‘சோனியா காந்தியை யாரோ தவறாக வழி நடத்துகின்றனர். ராகுல் காந்தியின் கனவான ‘எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி வர வேண்டும்’ என்ற எண்ணம் நாளுக்கு நாள் தொய்வடைந்து வருகிறது. அதற்குக் காரணமே சோனியாவின் தவறான முடிவுகள்தான்’’ என தொண்டர்கள் ஐவர் குழுவிடம் சொல்ல அவர்கள் அதிர்ந்து போய்விட்டார்களாம்.

கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே தி.மு.க.வுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்பதே ஐவர் குழு முன் பேசிய பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.
ஆட்சியில் பங்கெல்லாம் தரமுடியாது என்று உறுதியாகச் சொல்ல முடியாத அளவிற்கு காங்கிரஸின் தயவு தி.மு.க.விற்கு தேவையாக இருக்கிறது. என்ன செய்யப் போகிறது தி.மு.க.?

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com