Saturday, February 19, 2011

கலைஞர் உரை :"எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்"

இன்று (19.2.2011) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து  காணொலிக் காட்சி வாயிலாக  நடைபெற்ற மதுரை,  திருநெல்வேலி எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டல வளாகங்கள்  மற்றும் சென்னை மாநில தரவு மையம் ஆகியவற்றை  தமிழக முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

பின்னர் அவர் உரையாற்றினார்.     அப்போது அவர்,       ‘’தமிழகத்தில், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம், முதல்நிலை நகரங்களில் மட்டும் நிறுவப்பட்டுச் செயல்பட்டு வரும் தகவல் தொழில் நுட்பவியல் பூங்காக்களை  இரண்டாம்நிலை நகரங்களிலும் அமைத்துச் செயல்படுத்திட இந்த அரசு முடிவு செய்தது.

அதன்படி,  இரண்டாம் நிலை நகரங்களான மதுரை, திருச்சிராப்பள்ளி, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில்  ஒருங்கிணைந்த தகவல் தொழில் நுட்பவியல் வளாகங்கள் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்காக, அந்நகரங்களில் பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடங்களுக்கு மைய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டல அங்கீகாரமும் பெறப்பட்டு உள்ளது.
இந்தத் தகவல் தொழில் நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டல வளாகங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த பொது உள் கட்டமைப்பு வசதிகளான உட்புற சிமிண்ட் சாலைகள், தரவு வடகம்பி, மின்வட கம்பி மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்கள், கழிவுநீர்ச் சுத்திகரிப்பு ஆலை, தெருவிளக்குகள், சுற்றுப்புறச் சுவர், மதகு பாலங்கள், சுங்க அலுவலகக் கட்டடம், நிர்வாகக் கட்டடம் போன்ற அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

மதுரையில் இரண்டு தகவல் தொழில் நுட்பவியல் பூங்காக்களை அமைத்திட தமிழக அரசு முடிவு செய்து, அதன்படி, இலந்தைகுளம் கிராமத்தில் 28.91 ஏக்கர் நிலப்பரப்பையும்,  வடபழஞ்சி கிராமத்தில் 245.17 ஏக்கர் நிலப்பரப்பையும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு வழங்கியது.

இப்பூங்காக்களுக்கு 26.4.2008 அன்று   அடிக்கற்கள் நாட்டப்பட்டு; இன்று (19.2.2011) திறந்து வைக்கப்படுகின்றன.


  இலந்தைகுளம் தகவல் தொழில்நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் 32 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

இதில், 18 கோடி ரூபாய்ச் செலவில்  50 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் நிர்வாகக் கட்டடங்கள்; 7 கோடியே 44  இலட்சம் ரூபாய்ச் செலவில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப் பட்டுள்ளன.


இலந்தைக்குளம் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் இரண்டு தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த நிறுவனங்கள் அமைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
15 கோடி ரூபாய்ச் செலவில் பொது உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் மூன்று தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த நிறுவனங்கள் அமைய உள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

அடுத்த 5 ஆண்டு காலத்தில் இப்பூங்காக்களின்மூலம் 1400 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளும், 50 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், ஒரு இலட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் கிராமத்தில் 500 ஏக்கரில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

இதில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் முதலீடு 50 கோடி ரூபாயாகும். இப்பூங்காவில் மூன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்தப் பூங்காவில் முதற்கட்டமாக 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் பொது உள்கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், எல்காட் நிறுவனம் 50 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவிற்கான கட்டடம் கட்டியுள்ளது.

இப்பூங்காவிற்கு அடுத்த 5 ஆண்டு காலத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடும்,  40 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 80 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கி வைக்கப்படும் மூன்றாவது திட்டம் தேசிய மின் ஆளுமை வடிவமைப்பின் தூண்களில் முக்கியமான ஒன்றான மாநில தரவு மையம் ஆகும். 

இந்த மாநிலத் தரவு மையம் சென்னை இராஜீவ்காந்தி சாலையில் உள்ள பெருங்குடி வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டுவரும் எல்காட் நிறுவனத்தின் தமிழக பெரும்பரப்பு வலை அமைப்புச் செயலாக்க மையம் அமைந்துள்ள அதே கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இது, ஏறத்தாழ 4500 சதுரடி பரப்பளவில் 35 வழங்கிகளும், 5 வலையமைப்பு அடுக்குகளும் கொண்ட வரையறுக்கப்பட்ட மிகப் பெரிய தரவு மையமாக அமைக்கப்பட்டுள்ளது.

மிகச்சிறந்த மின் சேவைகளை அரசிடமிருந்து அரசுக்கும், அரசிடமிருந்து மக்களுக்கும், அரசிடமிருந்து வணிகத்திற்கும் அளிக்கும் வகையில் இத்தரவு மையம் செயல் படுத்தப்படும்.
தமிழகத்தின் பெரும்பரப்பு வலையமைப்பின் வாயிலாக அரசு மற்றும் அதன் முகவர்களும், மக்கள் பொது சேவை மையத்தில் இணையம் வாயிலாகப் பொதுமக்களும் இத்தரவு மையச் சேவைகளைப் பெற இயலும் என்பதை அறிவிக்க விரும்புகிறேன்.

மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படும் இத்திட்டத்திற்கு மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அதன் பங்களிப்பாக 55 கோடியே 80 இலட்சம் ரூபாயையும்;  தமிழக அரசு தனது பங்களிப்பாக 5 கோடியே 16 இலட்சம் ரூபாயையும் அளித்துள்ளன.

 இத்தரவு மையத்தை அமைத்ததன் மூலம் இந்தியாவிலேயே இத்தகைய நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ள முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்’’ என்று தெரிவித்தார்
.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com