Thursday, April 21, 2011

"மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது'' - இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை

டெல்லி: 4 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது என மத்திய அரசு கூறியுள்ளது. மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது என்று இலங்கையை எச்சரித்துள்ளது.


கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 4 தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் நிருபர்களிடம் கூறுகையில், "4 தமிழக மீனவர்கள் உயிரிழந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு மீனவரின் உடல், யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கி உள்ளது.

இதனால் யாழ்ப்பாணத்தில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுக்காக காத்திருக்கிறோம். இப்போது போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த மரணம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. மேற்கொண்டு தகவல் கிடைக்குமா என்பதை அறிய, தமிழக அரசின் தலைமை செயலாளருடன் டெலிபோனில் பேசினேன். தமிழக அரசிடம் இருந்து விரிவான தகவலுக்காக காத்திருக்கிறோம்.

கடந்த சில மாதங்களாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். தமிழக மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறோம். ஒருவேனை, தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதாக தெரிய வந்தால், அதுபற்றி இந்தியாவிடம்தான் தெரிவிக்க வேண்டும்.

அந்த மீனவர்களைப் பிடித்து, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும், அவர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தக்கூடாது.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண, இந்திய-இலங்கை கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அடுத்த கூட்டம் நடக்கும் தேதி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை", என்றார்.

மே 13ல் ஓட்டு எண்ணிக்கை: 17ம் தேதி ஆட்சி- கால அவகாசம் இல்லாததால் கட்சிகள் தவிப்பு

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்குப் பின் புதிய அரசு பதவியேற்க வெறும் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், அதற்குள் ஆட்சி அமைத்துவிட முடியுமா என்ற குழப்பத்திலும் கவலையிலும் திமுக, அதிமுக ஆகியவை ஆழ்ந்துள்ளன.


2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு 17-5-2006ம் தேதி காலை 9.30 மணிக்கு 13வது சட்டசபை கூடியது. உடனே புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்.

அரசியல் சட்ட விதிகளின்படி தமிழகத்தின் 14வது சட்டசபை 17-5-2011ம் தேதி காலை 9.30 மணிக்குள் கூடி புதிய எம்.எல்.ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அதற்கு முன்பாக தற்காலிக சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

முன்னதாக இப்போது ஆட்சியில் உள்ள அரசு தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்க வேண்டும். அதன் பின்னர் அவர் வென்ற கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்.

இதையடுத்து தேர்தலில் வென்ற கட்சியின் அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும். கூட்டணி  ஆட்சியாக இருந்தால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்கள் ஆளுநரிடம் தரப்பட வேண்டும்.

இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பதற்கான தகவல்கள் முறைப்படி அனுப்பப்பட்டு அனைவரும் சென்னைக்கு வரவேண்டும். யாராவது பதவி ஏற்க வரமுடியாத சூழ்நிலை இருந்தால் அவரது பதவியை முடக்கி வைப்பது குறித்து கவர்னர் முடிவு எடுக்கலாம். இதற்கெல்லாமே மொத்தமே 4 நாள் தான் அவகாசம் உள்ளது.

கூட்டணி ஆட்சி அமையலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையி்ல் திமுகவோ அல்லது அதிமுகவோ தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவது குறித்து பேசி முடிவெடுக்க வேண்டும். சில கட்சிகள் பதவிக்காக கூட்டணி மாறக் கூட வாய்ப்புள்ளது. துணை முதல்வர் , அமைச்சர் பதவிகள் என மோதல்கள் ஏற்பட்டால் உடனே இதில் தீர்வு கண்டு அரசை அமைத்துவிட முடியாது. இதற்கு கால அவகாசம் தேவைப்படும்.

ஆனால், தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13ம் தேதி முடிவடைந்தது. அடுத்த மாதம் 13ம் தேதி தான் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. மின்னணு எந்திர வாக்குப்பதிவு என்பதால் 13ம் தேதி மாலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகி விடும்.

என்றாலும் அமைச்சரவை பதவி ஏற்பு, சட்டசபை கூடுதல், துணை சபாநாயகர் தேர்வு, எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு ஆகியவற்றுக்கான கால அவகாசம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் கட்சிகள் தவிப்பில் உள்ளன.

தேர்தல் முடிவை அறிய ஒரு மாத அவகாசம் கொடுத்த தேர்தல் ஆணையம், அமைச்சரவை, சட்டசபை கூட்டம், எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு போன்ற முக்கிய அரசியல் நடவடிக்கைகளுக்கு போதுமான கால அவகாசம் கொடுக்கவில்லை.

திமுகவோ, அதிமுகவோ எந்தக் கட்சியாக இருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 119 இடங்களில் போட்டியிட்டுள்ள திமுக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை.

கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான இடங்களைப் பெற்றாலும், யார், யாருக்கு அமைச்சர் பதவி, யார் யாருக்கு எந்தெந்த துறை என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். இதையெல்லாம் ஆலோசித்து முடிவு எடுக்க கால அவகாசம் இல்லை.

அதிமுகவைப் பொறுத்தவரை 160 இடங்களில் போட்டியிட்டுள்ளது. தனித்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓரிரு நாளில் அதிமுக அரசு பதவியேற்கலாம். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டால் அதிமுகவுக்கும் கால அவகாசம் தேவை.

தேமுதிக என்ற யானையை கட்டுப்படுத்தி ஆட்சிக் கட்டிலில் ஏறுவது அதிமுகவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

இது, தமிழகத்தில் இதுவரை இல்லாத புது அனுபவம் ஆகும்.

எந்தக் கூட்டணி அதிக இடங்களை பெறுகிறதோ அந்தக் கூட்டணி பெரும்பான்மையை காட்டும் வகையில் எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை, கவர்னரிடம் அளிக்க வேண்டும். அவர் திருப்தியடைந்தால், அந்த கூட்டணியின் தலைமையை ஆட்சி அமைக்க அழைப்பார். ஆனால், ஆதரவு கடிதம் தருவதில் சிக்கல் ஏற்பட்டால், எந்தக் கட்சி தனித்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதோ அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து, குறிப்பிட்ட நாட்களுக்குள் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டுமென கெடு விதிப்பார்.

இதனால் கட்சிகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதோடு நிம்மதியின்றி தவித்து வருகின்றன என்பதே நிஜம்

தகவல் பெறும் உரிமை: வேறு சிறந்த வழியிருக்கிறதா?

எந்த முடிவுகளை மேற்கொள்ளவும் முக்கியத் துணையாக நிற்பவை நம்பகமான தகவல்கள்தான். அரசாங்கமாக இருந்தாலும் சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி பெறுகிற சரியான தகவல்களின் அடிப்படையிலேயே எந்த முடிவையும் எடுக்க முடியும்.


இந்திய அரசைப் பொறுத்தவரை, தங்களிடமுள்ள தகவல்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளது!.

அரசு எடுக்கும் முடிவுகளில் பொதுமக்களின் பங்களிப்பே இல்லாமல் போனதன் பின்னணி இதுதான்.

2005ம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், அரசிடமிருந்து தகவல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு ஓரளவு துணை புரிகிறது. ஆனால் தகவல்களைப் பெற இதுதான் சிறந்த வழியா? இதை விட சிறந்த, வெளிப்படைத் தன்மை கொண்ட வேறு வழிமுறை ஏதேனும் உள்ளதா?.

இது தொடர்பான உங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம். சிறந்த கருத்து தெரிவிப்போர் தேர்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுவர்.

ஐபிஎல் வீரர்களை திரும்ப அழைக்கும் விவகாரம்: பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்து!

கொழும்பு: ஐபிஎல்லில் விளையாடி வரும் தங்கள் நாட்டு வீரர்களை திரும்ப அழைப்பது தொடர்பான முடிவை பரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ விடுத்த கோரிக்கையை நிராகரித்தது இலங்கை அரசு.


இதன் மூலம் இலங்கை வீரர்கள் கண்டிப்பாக மே 5-ம் தேதிக்குள் இலங்கை திரும்ப வேண்டும் என்பதில் அந்நாட்டு அரசும், கிரிக்கெட் வாரியமும் உறுதியாக உள்ளது தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு தயாராவதற்காக ஐபிஎல்லில் விளையாடி வரும் வீரர்கள் மே 5-ம் தேதிக்குள் இலங்கை திரும்ப வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ இடையே அதிகாரப்பூர்வமாக கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. எனினும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தினர் பேசி, டுவென்டி20 போட்டியில் மே 15-ம் தேதி வரையாவது விளையாட இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

எனினும் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும், கிரிக்கெட் வாரியத்தினரும் இந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வுக் குழுவினர் நேற்று நீண்ட நேரம் விவாதித்த பிறகு, இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

இலங்கை அணியின் முன்னால் கேப்டன் குமார் சங்ககரா, மஹில ஜெயவர்த்தன மற்றும் இலங்கை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள திலகரத்ன தில்ஷான் உள்ளிட்ட 11 வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இலங்கை அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டு உடனடியாக நாடு திரும்புவார்கள் எனத் தெரிகிறது.

இலங்கை கிரிக்கெட்டின் நலன்கள்தான் தனக்கு முக்கியம் எனத் தெரிவித்த அளுத்கமகே, இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு விளக்கமாக எடுத்துக்கூறப்படும் என்றும் கூறியுள்ளார்.
 
2010-2011 www.christosebastin.blogspot.com