கொழும்பு: ஐபிஎல்லில் விளையாடி வரும் தங்கள் நாட்டு வீரர்களை திரும்ப அழைப்பது தொடர்பான முடிவை பரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ விடுத்த கோரிக்கையை நிராகரித்தது இலங்கை அரசு.
இதன் மூலம் இலங்கை வீரர்கள் கண்டிப்பாக மே 5-ம் தேதிக்குள் இலங்கை திரும்ப வேண்டும் என்பதில் அந்நாட்டு அரசும், கிரிக்கெட் வாரியமும் உறுதியாக உள்ளது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு தயாராவதற்காக ஐபிஎல்லில் விளையாடி வரும் வீரர்கள் மே 5-ம் தேதிக்குள் இலங்கை திரும்ப வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ இடையே அதிகாரப்பூர்வமாக கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. எனினும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தினர் பேசி, டுவென்டி20 போட்டியில் மே 15-ம் தேதி வரையாவது விளையாட இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
எனினும் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும், கிரிக்கெட் வாரியத்தினரும் இந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வுக் குழுவினர் நேற்று நீண்ட நேரம் விவாதித்த பிறகு, இந்த முடிவை அறிவித்துள்ளனர்.
இலங்கை அணியின் முன்னால் கேப்டன் குமார் சங்ககரா, மஹில ஜெயவர்த்தன மற்றும் இலங்கை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள திலகரத்ன தில்ஷான் உள்ளிட்ட 11 வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இலங்கை அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டு உடனடியாக நாடு திரும்புவார்கள் எனத் தெரிகிறது.
இலங்கை கிரிக்கெட்டின் நலன்கள்தான் தனக்கு முக்கியம் எனத் தெரிவித்த அளுத்கமகே, இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு விளக்கமாக எடுத்துக்கூறப்படும் என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment