Thursday, April 21, 2011

இப்போது நொய்டா நில சர்ச்சையில் 'லோக் பால்' சாந்தி பூஷண்!

டெல்லி: ஊழலுக்கு எதிரான லோக் பால் மசோதா வரைவுக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண், இப்போது நில விவகாரத்தில் மாட்டியுள்ளர்.


'உச்ச நீதிமன்ற நீதிபதிகளை சில கோடிகள் கொடுத்தால் விலைக்கு வாங்கிவிடலாம்' என்று அவர் கூறியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ சிடியும் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நொய்டா அருகே 10,000 சதுர அடி நிலத்தை தனது மகன் ஜெயந்தின் பெயரில் அம் மாநில முதல்வர் மாயாவதியின் உதவியால் சாந்தி பூஷண் அடிமாட்டு விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், இதை சாந்தி பூஷண் மறுத்துள்ளார். என்னை லோக்பால் குழுவிலிருந்து நீக்க அடுத்தடுத்து பொய்யான புகார்களை சில சக்தி வாய்ந்த நபர்கள் கிளப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனக்கு ஒதுக்கப்பட்ட நிலம் முதல்வர் மாயாவதியின் கோட்டாவிலிருந்து வரவில்லை. அதை நான் முறைப்படி விண்ணப்பித்து வாங்கினேன். சரியாகச் சொன்னால் அந்த நிலம் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை என்றார்.

இந் நிலையில் பூஷணுக்கு சிக்கலை உருவாக்கியுள்ள சிடியை வெளியிட்டதாகக் கருதப்படும் அமர் சிங், அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். சிடியை நான் வெளியிடவில்லை. ஆனால், அதில் நீதிபதிகளை விலைக்கு வாங்கலாம் என்று கூறியது சாந்தி பூஷண் தான் என்பது மட்டும் நிச்சயம். அது தனது குரல் இல்லை என்று சாந்தி பூஷண் நிரூபிக்கட்டும் என்றார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ரீடா பஹுகுண ஜோஷி டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசுகையில், லோக்பால் மசோதாவை கொண்டு வர சமூக சேவகர் அண்ணா ஹசாரா முயற்சி எடுத்து வருவதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் அதன் வரைவுக் குழுவில் இடம்பெற்றுள்ள சாந்தி பூஷண், அவரது மகன் பிரசாந்த் பூஷண் இருவரும் தங்கள் மீதான புகார்களுக்கு முதலில் பதில் தெரிவிக்க வேண்டும்.
நொய்டாவில் முதல்வர் மாயாவதியின் சிலைகள் கொண்ட பூங்கா அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில் அவருக்கு எதிராக சாந்தி பூஷண் ஆஜராகி வந்தார். இந்நிலையில், அவருக்கும் அவரது மகனுக்கும் நொய்டாவில் 10,000 சதுர அடி பரப்பளவு உள்ள பண்ணை வீட்டுக்கான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது லஞ்சம் இல்லாமல் வேறு என்ன. இதுகுறித்து சாந்தி பூஷண் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

இந் நிலையி்ல் லோக்பால் மசோதாவை சீர்குலைக்க அமர் சிங் மூலமாக அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி கெடுத்து வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com