Thursday, April 21, 2011

அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் விஜய் வீடு மீது திமுகவினர் தாக்குதல்-ஜெயலலிதா

சென்னை: பொதுத்தேர்தலின் போது, அதிமுகவிற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் செயல்பட்டனர் என்பதற்காக, நடிகர் விஜய் வீட்டினை திமுகவினர் நள்ளிரவில் தாக்கியுள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


கொடநாட்டில் ஓய்வெடுத்து வரும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைக் காலமாக கொலை, கொள்ளைகள் தமிழ்நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரை 18.4.2011 அதிகாலை ஒரு மர்மக் கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளது. இதேபோன்று, மதுரை மாவட்டம், உச்சபரம்புமேடு பகுதியில் டீக்கடை நடத்தி வந்த சந்துரு என்பவரை திமுக கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளது.

மதுரையில் மட்டும் கடந்த 15 நாட்களில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதே போல், சென்னை கல்லூரி மாணவர் ஒருவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சாலைமறியல் நடத்திய மாணவ- மாணவியர் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலின் போது, அதிமுகவிற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் செயல்பட்டனர் என்பதற்காக, நடிகர் விஜய் வீட்டினை திமுகவினர் நள்ளிரவில் தாக்கியுள்ளனர். இதே போன்று, சென்னையை அடுத்த நெற்குன்றம் பகுதியில் கூலித்தொழிலாளி ஒருவர் மர்மக்கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோவை மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் பணியாற்றியதன் காரணமாக, தேமுதிக மாவட்டப் பொருளாளர் கேசவன் மீது திமுக கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த கேசவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவற்றின் உச்சகட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த மும்தாஜ் என்பவர் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, திமுகவைச் சேர்ந்த கல்யாணபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முரளீதரன் தனது வாகனத்திற்கு, மும்தாஜ் வழி விட மறுக்கிறார் என்று தெரிவித்து, அவரையும், அவரது மகனையும் காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்காமல், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறை உதவி ஆய்வாளர் மும்தாஜ் மற்றும் அவரது மகன் மீது பல்வேறு பிரிவுகளில் காவல்துறை வழக்குகளை பதிவு செய்துள்ளது. திமுகவிற்கு சாதகமாக காவல் துறை செயல்படுவதை கண்டித்து, காவல்துறை உதவி ஆய்வாளர் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்துள்ளதாக தற்போது கூறப்படுகிறது.

காவல் துறை உதவி ஆய்வாளருக்கே இந்த கதி என்றால், சாதாரண மக்களின் நிலைமை என்ன என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது என்கின்றனர் பொதுமக்கள். தற்போது திமுகவினரால் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைச் சம்பவங்களில் குற்றவாளிகள் பிடிபட்டதாகத் தெரியவில்லை. குற்றவாளிகளை போலீசார் தேடிக் கொண்டே இருக்கின்றனர்.

வாக்குப்பதிவு முடிந்து 6 நாட்கள் முடிவதற்குள்ளேயே இந்த நிலைமை என்றால், வாக்கு எண்ணிக்கை நாள் வருவதற்குள் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற பீதியில் மக்கள் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அரசை வைத்துக்கொண்டு, இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையை எப்படி நடத்தப் போகிறதோ என்ற ஐயமும் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. தமிழக மக்கள் மனதில் உள்ள ஐயப்பாடுகளை களையும் வகையில், உறுதியான, திடமான முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கவேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும், தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com