டெல்லி: சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
வழக்கை சரியாக விசாரிக்காமல் ஜான் டேவிட்டின் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு. இவர் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசுவை, 1996ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி முதல் காணவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடினர்.
விசாரணையில் அதே கல்லூரியில் படித்து வந்த ஜான் டேவிட் என்ற மாணவர் தான் நாவரசுவை ராகிங் செய்து, கொலை செய்து, தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து பஸ்சில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜான் டேவிட் கைது செய்யப்பட்டார்.
ஜான் டேவிட் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சென்னை தாம்பரத்தில் ஒரு பஸ்சில் இருந்த சூட்கேசில் இருந்து நாவரசுவின் உடல் துண்டுகளை கைப்பற்றினர்.
இந்த வழக்கை விசாரித்த சிதம்பரம் செசன்ஸ் நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டேவிட் தரப்பு அப்பீல் செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள் கொலை குற்றம் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர்.
ஜான் டேவிட்டின் இந்த விடுதலையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முகுந்தம் ஷர்மா, அனில் தபே ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர்.
மாணவர் நாவரசு கொலை வழக்கு விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜான் டேவிட்டுக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.
வழக்கை சரியாக விசாரிக்காமல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும் ஜான் டேவிட்டுக்கு இட்டை ஆயுளை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மேலும் ஜான் டேவிட் உடனடியாக கடலூர் சிறை அதிகாரி முன் சரணடைய வேண்டும் என்று்ம் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment