டெல்லி: 4 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது என மத்திய அரசு கூறியுள்ளது. மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது என்று இலங்கையை எச்சரித்துள்ளது.
கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 4 தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் நிருபர்களிடம் கூறுகையில், "4 தமிழக மீனவர்கள் உயிரிழந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு மீனவரின் உடல், யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கி உள்ளது.
இதனால் யாழ்ப்பாணத்தில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுக்காக காத்திருக்கிறோம். இப்போது போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த மரணம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. மேற்கொண்டு தகவல் கிடைக்குமா என்பதை அறிய, தமிழக அரசின் தலைமை செயலாளருடன் டெலிபோனில் பேசினேன். தமிழக அரசிடம் இருந்து விரிவான தகவலுக்காக காத்திருக்கிறோம்.
கடந்த சில மாதங்களாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். தமிழக மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறோம். ஒருவேனை, தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதாக தெரிய வந்தால், அதுபற்றி இந்தியாவிடம்தான் தெரிவிக்க வேண்டும்.
அந்த மீனவர்களைப் பிடித்து, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும், அவர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தக்கூடாது.
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண, இந்திய-இலங்கை கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அடுத்த கூட்டம் நடக்கும் தேதி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை", என்றார்.
No comments:
Post a Comment