மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் ரூ. 81 லட்சம் அளவுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்திய மதுரை கலெக்டர் சகாயம், தமிழக தேர்தல் அதிகாரிக்கு தனது அறிக்கையை அனுப்பியுள்ளார். இதனால் அந்தத் தொகுதியின் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மதுரை மேற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கட்சி சார்பில் ரூ.81 லட்சம் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணம் சிக்கியதை அடுத்து அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படலாம் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.
இந் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யும்படி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சகாயத்துக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மேற்கு தொகுதியில் விசாரணை நடத்திய கலெக்டர் சகாயம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு தனது 3 பக்க அறிக்கையை அனுப்பினார்.
இது தொடர்பான ஆவணங்கள், வீடியோ பதிவுகள் ஆகியவற்றையும் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அதில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற சகாயம் எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை என்று தெரிகிறது.
ஆனாலும் அவர் அனுப்பிய அறிக்கை மற்றும் ஆவணங்களை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும். பணம் பட்டுவாடா செய்யப்பட்டது உறுதியானால் மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கையின்போது மதுரை மேற்கு தொகுதியின் தேர்தல் முடிவு நிறுத்திவைக்கப்படலாம்.
அல்லது தேர்தலை ரத்து செய்து விட்டு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் என்று கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரையின் 10 தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர சோதனைகள் நடத்தி ரூ.4 கோடி பறிமுதல் செய்தனர்.
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட நேரு நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் அதிகாரி ஜெய்சிங் ஞானதுரை தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்த ஒரு காரை சோதனையிட்டபோது சிக்கிய ஒரு டைரியில் மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட 4 வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவரங்கள் எழுதப்பட்டிருந்தன.
ரூ.81.20 லட்சம் வரை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டதாக அதில் எழுதப்பட்டிருந்தது. 65வது வார்டுக்கு ரூ.16.35 லட்சம், 66வது வார்டுக்கு ரூ.18.96 லட்சம், 67வது வார்டுக்கு ரூ.21.11 லட்சம், 69வது வார்டுக்கு ரூ.24.41 லட்சம் தரப்பட்டுள்ளதாக அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த டைரி மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தமிழக தேர்தல் கமிஷனும் சகாயத்திடம் அறிக்கை கோரியது என்பது நினைவுகூறத்தக்கது
No comments:
Post a Comment