Sunday, March 6, 2011

மதிமுக கேட்பது 36.. கிடைக்கப் போவது 17!

சென்னை: அதிமுக கூட்டணியில் விஜய்காந்த் நுழைந்து 41 தொகுதிகளைப் பெற்றுவிட்ட நிலையில் மதிமுகவுக்கு 17 தொகுதிகள் தான் கிடைக்கும் என்று தெரிகிறது.

அதிமுக கூட்டணியி்ல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 35 இடங்களில் வைகோவின் மதிமுக போட்டியி்ட்டது. அந்தக் கூட்டணி அமைவதற்கு முதல் நாள் வரை திமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. மதிமுகவுக்கு 27 இடங்கள் கொடுப்பதாக திமுக கூற, அதை ஏற்க மறுத்து திடீரென அதிமுக கூட்டணிக்கு மாறினார் வைகோ.



இதையடுத்து அவருக்கு 35 இடங்கள் தந்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஆனால், அதில் 4ல் மட்டுமே வென்று ஜெயலலிதா கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார் வைகோ.

இந் நிலையில் அடுத்து வந்த மக்களவைத் தேர்தல், இப்போது நடக்கும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுக்கு வலை விரித்துப் பார்த்தார் ஜெயலலிதா. காங்கிரசுடன் கூட்டணி அமையப் போகிறது என்று ஜெயலலிதா ஆதரவு பத்திரிக்கைகளிலும் செய்திகள் போட்டனர். ஆனால், அப்படி ஒன்று நடக்கவி்ல்லை.

இதையடுத்து யாரை குடிகாரர் என்று சொன்னாரோ அதே விஜய்காந்துடன் கூட்டணிக்கு ஜெயலலிதா முயன்றார். இரு தரப்பிலும் கடும் இழுபறிக்குப் பின்னர் யாரை ஊத்திக் கொடுத்தவர் என்று சொன்னாரோ அவருடனே கூட்டணி அமைத்தார் விஜய்காந்த். இதற்கு ஒரு பத்திரிக்கையாளர் தான் மிகவும் முயற்சி எடுத்தார்.

இப்போது விஜய்காந்த்தின் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் தரப்பட்டுவிட்ட நிலையில் எல்லோராலும் மிகவும் பாவமாகப் பார்க்கப்படுகிறார் வைகோ. தன்னை பொடாவில் கைது செய்தவர் என்றாலும், புலிகளின் தீவிரமான எதிர்ப்பாளர் என்றாலும் கூட திமுகவின் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல் அதிமுக கூட்டணியிலேயே வைகோ தொடர வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.

மதிமுகவை ஒழித்துக் கட்ட திமுக தீவிரமாக உள்ள நிலையில் வைகோவுக்கு ஜெயலலிதாவை விட்டால் வேறு வழியும் இல்லை.

இப்போது அதிமுக கூட்டணியில் 15 கட்சிகள் உள்ளன. இதில் மனித நேய மக்கள் கட்சிக்கு 3, புதிய தமிழகம் கட்சிக்கு 2, சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு 1 என சின்ன சின்ன கட்சிகள் சிலவற்றுக்கும் தேமுதிகவுக்கும் ஒதுக்கப்பட்டது தவிர முக்கிய கட்சிகளான மதிமுக, இடதுசாரிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு ஏற்ற கூட்டுத் தொகையான 9 வரும் வகையில் அதிமுக 144 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. மிச்சமுள்ள இடங்களி்ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்கள் மட்டுமே தர அதிமுக முடிவு செய்துள்ளது. நாளை மதிமுக, இடதுசாரிகளுடன் அதிமுக தொகுதி உடன்பாட்டை இறுதி செய்யலாம் என்று தெரிகிறது. இது தவிர பார்வர்டு ப்ளாக் 1, சரத்குமார் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, கொங்கு கட்சியின் ஒரு பிரிவுக்கு என சில இடங்கள் ஒதுக்க வேண்டியுள்ளது.

இதனால் மதிமுகவுக்கு அதிகபட்சமே 17 இடங்கள் தான் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதில் சரத்குமாரும் கார்த்திக்கும் ஓரிரு இடங்களுக்கு எல்லாம் நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. இடங்கள் போதவில்லை வைகோவோ, கார்த்திக்கோ, சரத்குமாரோ, இடதுசாரிகளோ முரண்டு பிடித்தால் விஜய்காந்த் உள்ள தைரியத்தில் அவர்களை வெட்டிவிடவும் அதிமுக தயங்காது என்கிறார்கள்.

இதனால் கொடுப்பதை வாங்கிக் கொண்டு போக வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் தான் சமீபத்தில் நடந்த தனது கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய வைகோ, நிலைமை மாறிவிட்டது. நாமும் அதற்கேற்ப மாறிக் கொள்ள வேண்டும் என்று கட்சியினருக்கு பொடி வைத்தார்.

கடந்த ஒரு மாதமாக அதிமுகவுடன் நடத்திய தொகுதி்ப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் மதிமுக 36 இடங்கள் கோரி வந்தது. அதாவது கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட ஒரு சீட் அதிகம் வேண்டும் என்று கோரியது.

மதிமுகவுக்கு ஒற்றை இலக்கத்தில் தான் சீட் தர முடியும் என்று ஆரம்பித்த அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக 17க்கு வந்துள்ளது. ஆனால், 36 இல்லாவிட்டாலும் பரவாயில்லை 27 இடங்களாவது வேண்டும் என்று வைகோ கோரி வருகிறார். ஆனால், கடந்த தேர்தலில் தரப்பட்டதில் பாதியைத் தான் இம்முறை அதிமுக தரவுள்ளது. மிக அதிகபட்சம் என்றால் 20 சீட் தான் என்கிறார்கள்.

உண்மையிலேயே பாவம் நம்ம வைகோ!

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com