Tuesday, August 2, 2011

விலைவாசி உயர்வு: எதிர்கட்சிகள் அமளி: ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு அரசு சம்மதம்

புதுடில்லி: பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் 2 வது நாளாக இன்று காலை 11 மணிக்கு துவங்கியதும் எதிர்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இன்றைய அலுவல் முழுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து விலைவாசி உயர்வு குறித்து ஓட்டெபடுப்புடன் கூடிய விவாதத்திற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. ஆளும்தரப்பு மற்றும எதிர்கட்சிகள் இடையே நடந்த பேச்சின்போது இந்த சமரசம் ஏற்பட்டது. நாளை ( புதன்கிழமை ) காலை 11 மணிக்கு லோக்சபாவில் இந்த விவாதம் துவங்குகிறது.

Tuesday, May 3, 2011

டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடன் உடலை கடலில் வீசிய அமெரிக்கா

இஸ்லாமாபாத்: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடனின் உடலை கடலில் வீசி விட்டது.


பின்லேடனின் உடலை நிலத்தில் புதைத்தால், அந்த இடம் தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறி விடும் என்ற காரணத்தால், உடலை தரையில் புதைக்காமல் கடலில் வீசியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்க அதிரடிப்படை நள்ளிரவில் நடத்திய துணிகர வேட்டை


இஸ்லாமாபாத் / வாஷிங்டன்:சர்வதேச பயங்கரவாதியும், அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஒசாமா பின்லாடன், அமெரிக்க அதிரடிப்படை நள்ளிரவில் நடத்திய துணிகர வேட்டையில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதன்மூலம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள அப்போதாபாத்தில், அவர் பல ஆண்டுகளாக பதுங்கியிருந்தது அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுர கட்டடங்கள், கடந்த 2001ம் ஆண்டு செப்., 11ம் தேதி, விமானங்கள் மூலம் மோதி தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதல் உட்பட உலக நாடுகள் பலவற்றில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தவர் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன். அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவரான இவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கப் படைகள் தேடி வந்தன. இவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 115 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில், அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்திய பின், அங்கிருந்து தப்பிய ஒசாமா, பாக்., - ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பழங்குடியின பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இதனால், அப்பகுதியில் முகாமிட்டு அமெரிக்கப் படைகள் தீவிரமாக தேடி வந்தன. இந்த தேடுதல் வேட்டையில் பலன் கிடைக்கவில்லை. இருந்தாலும், ஒசாமா எங்கிருக்கிறார் என்பதை கண்டறியும் பணியில் அமெரிக்கப் படையினரும், அந்நாட்டு உளவு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணையில், பயங்கரவாதி ஒசாமாவுக்கு செய்திகளைக் கொண்டு செல்லும் வேலையாட்கள் மூலமாக, அவர் மறைந்திருக்கும் இடம் கண்டறியப்பட்டது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கி.மீ., தொலைவில் உள்ள அப்போதாபாத்தில், பாகிஸ்தான் காகுல் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் இருந்து சில அடிகள் தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு தெரிவித்த, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள், ஒசாமாவை கொல்வதற்கு அனுமதி கேட்டனர். அவரும் தீவிரமாக விசாரித்த பின், அனுமதி வழங்கினார்.
சுட்டுக் கொலை: இதையடுத்து, ஒசாமாவை கொல்வதற்கான திட்டம் தயாரானது. அவர் தங்கியிருந்த வீட்டிற்கு நேற்று அதிகாலை 1.30 மணிக்கு, நான்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய, அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையினர் 25 பேர், தங்களின் அதிரடியை துவக்கினர். அப்போது, ஒசாமாவின் பாதுகாப்புக்கு நின்றிருந்தவர்களுக்கும், அமெரிக்கப் படைவீரர்களுக்கும் இடையே சண்டை நடந்தது. 40 நிமிடங்கள் நீடித்த சண்டையில், ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்தார். ஒசாமா கொல்லப்பட்டதன் மூலம், அமெரிக்க ராணுவத்தின் பத்து ஆண்டு கால தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது. ஒசாமாவுடன் அவருக்கு செய்திகளைக் கொண்டு செல்லும் அவரின் மகனும், மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட மற்றொரு பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வீட்டில் இருந்த மற்ற எந்த பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதிப்பு இல்லை.

ஒசாமா தங்கியிருந்த வீட்டை, அமெரிக்கப் படையினர் சுற்றி வளைத்த போது, தனது பாதுகாவலர்களுடன் சேர்ந்து ஒசாமாவும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். ஒசாமா கொல்லப்பட்ட பின், அவரின் உடலை அமெரிக்கப் படையினர் கைப்பற்றினர். இந்தச் சண்டையின் போது, அமெரிக்கப் படையினர் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று சேதம் அடைந்தது. அதை அமெரிக்கப் படையினர் வெடிமருந்துகள் மூலம் அழித்தனர். சண்டை நடந்து ஒசாமா கொல்லப்பட்டு நான்கு மணி நேரத்திற்குப் பின், அவர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டார்.

பயங்கரவாதி ஒசாமா கொல்லப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியை சுற்றிவளைத்த பாகிஸ்தான் ராணுவத்தினர், ஒவ்வொரு வீடாக தேடுதல் வேட்டை நடத்தினர். ஒசாமா பதுங்கியிருந்த வீடு, வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்திருந்தது. வீட்டை சுற்றிலும் ஏழு அடி உயரத்திற்கு சுற்றுச்சுவரும், அதன்மீது மின்சார ஒயரும் பொருத்தப்பட்டிருந்தது என, பாகிஸ்தான் செய்தி சேனல்கள் கூறியுள்ளன.

பாகிஸ்தான் காகுல் ராணுவ பயிற்சிக் கல்லூரி அருகேயுள்ள இந்த வீட்டில், ஒசாமா பதுங்கியிருப்பதாக, அமெரிக்கப் படையினருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகவல் கிடைத்துள்ளது. அது முதல் அந்த வீட்டை அமெரிக்க உளவு நிறுவனத்தினர் கண்காணித்து வந்துள்ளனர். ஒசாமா தங்கியிருந்த வீட்டில் தொலைபேசி இணைப்பு இல்லை. "டிவி'யும் கிடையாது. வீட்டில் உள்ளவர்கள் பயன்படுத்திய குப்பைகள் எல்லாம் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளன.

வீட்டின் ஜன்னல்கள் எல்லாம் பெரிய அளவில் இருந்தன. சில வழிகள் மூலமாகவே மட்டுமே அந்த வீட்டிற்குள் செல்ல முடியும். சிலர் மறைந்திருப்பதற்காக கட்டப்பட்டுள்ளது போலவே அந்த வீடு உள்ளது. பாகிஸ்தானின் கைபர் - பக்துங்வா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த வீட்டை முதலில் ஆக்கிரமித்து, அதன்பின் ஒசாமா பதுங்கியிருக்க ஒப்படைக்கப்பட்டுள்ளது.பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டதில் உரிய நீதியை அமெரிக்க மக்களுக்கு வழங்கியதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார். உலகம் முழுவதும் இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒசாமாவின் 6 பிள்ளைகள், 2 மனைவிகள், 4 நெருங்கிய நண்பர்கள் பாகிஸ்தானில் கைது

இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் 6 பிள்ளைகளும், 2 மனைவிகளும் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒசாமா பின் லேடன் இஸ்லாமாபாத்தில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள அபோத்தாபாத்தில் வைத்து அமெரி்ககப் படைகளால் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் லேடனின் இளைய மனைவியும், ஒரு மகனும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒசாமாவின் 6 பிள்ளைகள், 2 மனைவிகள் மற்றும் 4 நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே 60 கிமீ தொலைவில் உள்ள மலைப்பகுதியில் வைத்து அவர்களை பாகிஸ்தானியப் படைகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
2010-2011 www.christosebastin.blogspot.com